கடலூர்:
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னமும் சமூகநீதி கிடைக்கவில்லை என்று, பண்ருட்டி எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் தெரிவித்தார். அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் பேசியது:
இந்தியாவில் 70 முதல் 80 சதம் வரை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசு உயர் அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. உயர் பதவிகளில் எல்லாம் உயர் சாதியினர்தான் உள்ளனர். மண்டல் கமிஷன் பரிந்துரை என்னவாயிற்று இதற்காகத்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மருத்துவர் ராமதாஸ் ஈடுபட்டார். ஆனால் முடியவில்லை. தேர்தல் வந்ததும் அனைவரும் சிதறி ஓடிவிடுகிறார்கள். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்னை என்றால் 125 எம்.பிக்கள் திரள்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பேச நாதியில்லை என்றார் வேல்முருகன். கூட்டத்துக்கு அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்க மாநில உதவித் தலைவர் உதசூரியக் கண்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி பேசினார். மாவட்டத் தலைவர் ஜோதிகுமரன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.முனுசாமி, ஹேமந்த் குமார், புருசோத்தமன், வழக்கறிஞர் மன்றவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.