திட்டக்குடி :
நெடுஞ்சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திட்டக்குடியில் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்குள் பஸ் புறப்படும் நேரம் சம்பந்தமாக அடிக்கடி பிரச்னை ஏற்படும். விருத்தாசலம் வரை செல்லும் தனியார் பஸ்கள் முன் கூட்டியே பஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்று முந்திச் சென்று, வழியில் உள்ள பயணிகளை ஏற்றி செல்வதால் அரசு டவுன் பஸ்களில் வருமான இழப்பு ஏற்படுவதாக அரசு பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு திட்டக் குடி பஸ் நிலையம் அருகே டி.என்.32 என்.2495 எண் அரசு டவுன் பஸ்சை டிரைவர் நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி தொழுதூர் புறப்பட தயாராக இருந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொறுமையிழந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களின் நேர பிரச்சனையால் திட்டக்குடி நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திட்டக்குடி பஸ் நிலையம் வெளியிலேயே பயணிகளை இறக்கிவிடுவதும், சாலையின் குறுக்கே நிறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
downlaod this page as pdf