கடலூர்:
மின்தடை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடலூர் நகருக்கு கேப்பர் மலை துணை மின்நிலையம், நத்தப்பட்டு துணை மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. கேப்பர் மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு கடலூருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக என்று கூறி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இத்தகைய மின் துண்டிப்பு அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.
இதனால் ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் போய்விட்டது. எனவே புதன்கிழமை நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகிக்கப் படவில்லை. இருக்கிற தண்ணீரை ஆங்காங்கே பிரித்து வழங்கினர். பல இடங்களில் குறைந்த நேரமே தண்ணீர் விநியோகம் இருந்தது. இதனால் லாரிகளில் தண்ணீர் விநியோகிப்போரை நகரில் பல இடங்களில் பார்க்க முடிந்தது. ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் கோடைக்கால வறட்சி காரணாக நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் நிலையில் மின்சார விநியோகமும் தடைபடுவதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக