உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்காக: ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணி



கடலூரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் கடற்கரைச் சாலையில், மக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்.
கடலூர்:
 
               நடைபாதையை ஆக்கிரமித்திருக்கும் கடைக்காரர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு வசதியாக, ரூ. 20 லட்சத்தில் அழகுபடுத்தி டைல்ஸ் (தரை ஓடு) பதிக்கும் பணியை கடலூர் நகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடலூர் உட்லண்ட்ஸ் பகுதியில் இருந்து சில்வர் பீச் வரை சுமார் 5 கி.மீ. தூரம், சுனாமி நிவாரண நிதியில் இருந்து, சாலையின் இருபுறமும் ரூ. 5 கோடி செலவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு உள்ளது. வாய்க்கால் மீது காங்கிரீட் தளம் அமைத்து மூடப்பட்டு, நடைபாதையாகப் மாற்றப்பட்டு உள்ளது. இப்பணி முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. மாநில நெடுஞ்சாலைப் பட்டியலில் இச்சாலை உள்ளது.
 
                நடைபாதை அமைக்கும் பணிக்காக, ஒரு சில நாள்கள் காலி செய்து கொடுத்த வியாபாரிகள், பணி முடிந்ததும் நடைபாதை மீது, மீண்டும் கடைகளை அமைத்துக் கொண்டனர். தற்போது இந்த நடைபாதையை அழகுபடுத்தும் முயற்சியாக, கடலூர் நகராட்சி ரூ. 20 லட்சத்தில் டைல்ஸ் பதிக்கும் பணியைக் ஒரு வாரமாக மேற்கொண்டு வருகிறது. பிற்பட்ட பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பணி நடப்பதாக நகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இப்பணியும் மிகவும் தரமற்றதாக செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். காங்கிரீட் தளத்தின் மீது 2 அங்குல உயரத்துக்கு ஆற்று மணல் கொட்டி, அதில் சிமென்டைக் கரைத்து லேசாகத் தெளித்துவிட்டு, அதன்மீது டைல்ஸ்கள் வைத்து வருகிறார்கள்.÷டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்து விட்டன. மேலும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள நடைபாதையில், சில தினங்களாக லாரிகளையும் நிறுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் டைல்ஸ்கள் நொறுங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே கடலூர் நகர ஆட்டோக்கள், நடைபாதைகளைத்தான் ஆட்டோ ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகின்றன.
 
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
                  இது நகராட்சிக்கு வேண்டாத வேலை. அங்கு டைல்ஸ் பதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ரூ. 15 கோடிக்கு மேல் தமிழக அரசு மானியமாக வழங்கினால்தான்  சாலைகளை செப்பனிட முடியும் என்ற நிலையில் இருக்கும் கடலூர் நகராட்சி, இந்த ரூ. 20 லட்சத்தைக் கொண்டு இரு சாலைகளைச் செப்பனிட முடியும் என்று  மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார். கடற்கரைச் சாலையில் நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து வணிகர்கள் கடைகளை அமைத்து இருப்பதாலும் உட்லண்ட்ஸ் திருப்பத்தில் ஆட்டோக்களை இடையூராக நிறுத்துவதாலும், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும்  இச்சாலையில், தொடர்ந்து போக்குரத்து நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில் கடலூரில் மாதம் ஒருமுறை  "நடைபாதை நடப்பதற்கே' என்ற போராட்டமும், வாரம் ஒருமுறை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரும் போராட்டமும் நடத்தப்போவதாக கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை எச்சரித்துள்ளது.
 
                     பேரவையின் நிர்வாகப் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இது தொடர்பாக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், நகராட்சிகளின் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மற்றும் கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வியாழக்கிழமை  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior