உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கவனிப்பாரற்று கிடக்கும் வள்ளலார் வீடு


இராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டின் முன்புறத் தோற்றம். தற்போது பூட்டப்பட்ட நிலையில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த அறை.
              எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பிய இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று அழிந்து வருகிறது. அதை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர்.
 
             சென்னை ஏழுகிணறு பகுதியில் எண். 31, வீராசாமி தெருவில் 1825 ஆம் ஆண்டு முதல் 1858 வரை 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் இராமலிங்க அடிகளார். "திருவருட்பிரகாச வள்ளலார்' என அவரை மக்கள் அன்புடன் அழைத்தனர். அவரது பெயராலேயே தற்போது இந்தப் பகுதி "வள்ளலார் நகர்' என்று அழைக்கப்படுகிறது. இராமலிங்கர் இங்கு வாழ்ந்தபோதுதான் அவருக்கு ஞானம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அவர் இயற்றிய திருவருட்பாவின் 5 திருமுறைகளை இங்கிருந்துதான் இயற்றியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்புதான் அவர் வடலூர் சென்று "சமரச சுத்த சன்மார்க்க சங்க'த்தை நிறுவி ஆன்மிகத் தொண்டாற்றி முக்தியடைந்தார் என்பது வரலாறு.÷சிற்ப வேலைப்பாடு நிறைந்த ஒற்றை மரக்கதவு, முற்றம், தூண்கள் நிறைந்த இராமலிங்கர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் இப்போதும் உள்ளது. ஆனால், அந்த வீடு பராமரிப்பில்லாமல் அழிந்துவருவது வருத்தம் அளிக்கிறது. அந்த வீட்டின் உரிமையாளர் அதை பலருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், இராமலிங்கர் இருந்த அறை மட்டும் பூட்டப்பட்டுக் கிடக்கிறது.
 
                 உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் எப்போதாவது வந்து அந்த அறையைச் சுத்தம் செய்து, விளக்கேற்றிவிட்டுச் செல்வாராம். அப்பகுதியில் உள்ள இராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் "திருவருட்பிரகாச வள்ளலார் நற்பணி சங்கம்' நிறுவி ஆண்டுதோறும் தைபூச ஜோதி தரிசன விழா போன்ற விழாக்களையும், அவர் பெயரால் அன்னதானமும் செய்து வருகின்றனர். இராமலிங்கர் போதித்த சுத்த சன்மார்க்க நெறிகளைப் பின்பற்றி வரும் பலர் பல வெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து அந்த வீடு பூட்டப்பட்டு இருப்பதைப் பார்த்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே அந்த இல்லத்தை அரசுடைமையாக்கி அதை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று விரும்பி அவரது தொண்டர்கள் எடுத்த முயற்சியின் பலனாக கடந்த ஆட்சியில் அந்த வீட்டை அரசுடைமையாக்க சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், எந்த காரணத்துக்காகவோ அது நிறைவேறவில்லை. இது அவரது தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
                        தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்கியதைப் போல், திருவருட்பா மூலம் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய இராமலிங்கர் வாழ்ந்த வீட்டையும் அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்று அவரது தொண்டர்கள் விரும்புகின்றனர். பழம் பெருமை வாய்ந்த தமிழின் வளர்ச்சிக்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் இத்தருணத்தில், அரசு தங்கள் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய இராமலிங்கர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றி அவரது வழியைப் பின்பற்றுபவர்களின் வாட்டத்தைப் போக்குமா அரசு?
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior