கடலூர்:
முதல் முறை டெண்டர் விடப்பட்டு அது ரத்தான பிறகு, தொன்மை வாய்ந்த கட்டடத்துக்கு வனத்துறையிடம் இருந்து மதிப்பீடு கோரப்பட்டு உள்ளது.
கடலூர் நெல்லிக்குப்பம், சாலையில் பழமைவாய்ந்த ஊராட்சி ஒன்றியக் கட்டடம். ஆங்கிலேயர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக விளங்கும் இக் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கிழக்கு இந்தியக் கம்பெனியின் நிர்வாக அலுவலகமாக விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின் இக்கட்டடத்தில் பலவேறு அலுவலகங்கள் இயங்கி இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகமாக இருந்து வந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கட்டடத்தின் ஒருபகுதி 12-16-2009 அன்று இடிந்து விழுந்தது.
அதன் கட்டடக்கலை அம்சத்துக்காக, தொன்மை வாய்ந்த இக்கட்டடத்தை பழுது பார்த்து, பயன்படுத்தலாம் என்பது பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. எனினும் இக்ககட்டடத்தை இடித்துவிட வேண்டும் என்பதில் ஊராட்சி ஒன்றியம் உறுதியாக உள்ளது. கட்டடத்தில் விலை உயர்ந்த பர்மா தேக்கு மரஉத்திரங்கள், தூண்கள், சட்டங்கள், ஜன்னல்கள், இரும்புப் பொருள்கள், செங்கற்கள் உள்ளன.மேலும் இக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அதில் ரூ. 1.5 கோடியில் புதிய கட்டடம் கட்டவும் ஊராட்சி ஒன்றியம் திட்டமிட்டு உள்ளது. எனவே இக்கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள, கடந்த 7-ம் தேதி டெண்டர் விடப்பட்டது.குறைந்தபட்சத் தொகையாக ரூ.14,21,183 அறிவிக்கப்பட்டு இருந்தது.
விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிளை மைதீன், ரூ. 14.5 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாகவும் அவர் உரிய நேரத்தில் பணம் செலுத்தத் தவறியதால், டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப் பட்டது.இந்நிலையில் இக்கட்டடத்தில் உள்ள தேக்கு மர உத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களின் தற்போதைய மதிப்பு என்ன என்று கண்டறிய வனத்துறைக்கு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்து உள்ளார். மறு மதிப்பீடு வந்த பிறகு மீண்டும் டெண்டர் விடப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே இக்கட்டடத்தை இடிக்காமல் அதன் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று, சமூக அக்கறை கொண்ட நடுநிலையாளர்கள் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன் ஆகியோர் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் பல பழமை வாய்ந்த கட்டடங்கள், அவற்றின் தொன்மைக் கட்டடக் கலையைக் கருத்தில் கொண்டு, பெரும் பொருள் செலவில் பழுதுபார்த்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.அதைப் போல இக்கட்டடத்தையும் பழுதுபார்த்து, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அருங்காட்சியகத்தை இங்கு அமைக்கலாம்.ஊராட்சி ஒன்றிய அலவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட, இதே வளாகத்தில் போதிய இடம் உள்ளது. மேலும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த எந்த ஒரு கட்டடத்தையும் இடிப்பதற்குத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அனுமதி பெறப்பட வேண்டும். அவ்வாறு இக்கட்ட டத்தை இடிக்க, அனுமதி பெறப்பட்டதா என்று தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக