உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

மண்டல பனை பொருள் பயிற்சி மையம்... தள்ளாடுகிறது! நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை தேவை

கடலூர் : 

                கடலூரில் இயங்கி வரும் மண்டல பனை பொருள் பயிற்சி மையம் போதிய நிதி வசதியின்றி நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் பனை தொழிலை ஊக்குவிக்கவும், அதனைச் சார்ந் துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் கீழ் தமிழ் நாடு மாநில பனை வெல்லம், தூரிகை (பிரஷ்) உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு இணையம் செயல்பட்டு வருகிறது. பனை சார்ந்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்கும் வகையில் கலை நயத்துடன் செய்திட தொழில் நுட்பங்களை கற்றுத் தருவதற்காக மண்டல பனை பொருள் பயிற்சி மையம் துவங் கப்பட்டது.

                 தென் இந்தியாவிற்கான மண்டல பயிற்சி மையத்தை கடந்த 1948ம் ஆண்டு கர்நாடகாவில் மத்திய அரசு துவங்கியது. ஓராண்டில் இந்த பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள கடலூருக்கு மாற்றப்பட்டு 1955ம் ஆண்டு வரை இயங்கியது. பின்னர் இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது .இருப்பினும் இந்தியாவில் பனை தொழிலில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில் உள்ள பனை தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் தொழில் வளர்ச்சிக்காக கடந்த 1961ம் ஆண்டு மாநில அளவிலான பனை தொழில் பயிற்சி நிலையம் கடலூர் கடற்கரை சாலையில் 4.39 ஏக்கர் பரப்பளவில் துவங்கப் பட்டது.மாநில அளவில் இயங்கி வந்த இந்த பயிற்சி மையம் 1970ம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை உள்ளடக்கிய மண்டல பயிற்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. 

               இங்கு மேற்கண்ட ஐந்து மாநிலங்களை சேர்ந்த பனை தொழிலில் ஆர்வமிக்க இளைஞர்களை ஆண்டிற்கு 110 பேரை தேர்வு செய்து பனை மரம் ஏறுதல், பதநீர் எடுத்தல், பனை வெல்லம், பனங் கற்கண்டு, சாக்லெட், குளிர்பானம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பனை மற்றும் ஈச்சம் ஓலையிலிருந்து தட்டு, கூடை, தொப்பி, தென்னை நாரிலிருந்து கயிறு, மிதியடிகள், பனை நாரிலிருந்து சைக்கிள் கூடை, தரை சுத்தம் செய்யும் பிரஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உதவித் தொகை, போக்குவரத்து செலவு மற்றும் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை மத்திய கதர் கிராம தொழில் ஆணையம் தமிழக கதர் கிராம தொழில் வாரியத்திற்கு வழங்கி வந்தது. பயிற்சி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விலை குறைவாகவும், தரமாகவும் இருந் ததால் அரசு அலுவலகங்களில் அதிக அளவு வாங்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்காக முக்கிய நகரங்களில் விற்பனை மையங்களும் துவங்கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

                  கடந்த 95ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்த இந்த பயிற்சி மையத்தில் 2 ஆயிரத்து 245 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் பலர் சுய தொழில் புரிந்து வருகின்றனர். சிறப்பாக இயங்கி வந்த இந்த பயிற்சி மையத்திற்கு மத்திய கதர் கிராம தொழில் ஆணையம் வழங்கி வந்த நிதியை நிறுத்திக் கொண்டதால், பயிற்சி அளிப்பது நிறுத்தப்பட்டதோடு, உற்பத்தியும் மெல்ல மெல்ல குறைந்து தற்போது பெயரளவிற்கு இயங்கி வருகிறது. இந்த பனைபொருள் பயிற்சி மையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவும், மீண்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பனை பொருள் உற்பத்தியை துவங்கவும், இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அரசு அலுவலகங்களில் கட்டாயம் வாங்கிட மாவட்ட நிர்வாகமும், அரசியல் பிரமுகர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior