சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஒன்றரை ஆண்டுகளில், எட்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் உண்டியல் காணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரை 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில், கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி அறநிலையத்துறை சார்பில் முதல் முறையாக நடராஜர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. உண்டியல் வருமானம் அதிகரித்ததால் கோவிலில் அடுத்தடுத்து பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. தற்போது கோவிலில் மொத்தம் ஒன்பது உண்டியல்கள் உள்ளன. ஐந்தாவது முறையாக கடந்த ஜனவரி 9ம் தேதி உண்டியல் திறந்தபோது, 2009 வரை மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ரூபாய் வருமானம் கிடைத்தது. கடந்த மார்ச் 10ம் தேதி ஆறாவது முறையாக உண்டியல் திறந்ததில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாயும், ஏழாவது முறையாக மே 13ம் தேதி திறந்தபோது 4 லட்சத்து 17 ஆயிரத்து 751 ரூபாய் இருந்தது. நேற்று எட்டாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட 30 பேர் எண்ணினர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருந்தது.
கோவில், அரசு கட்டுப்பாட்டிற்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில், உண்டியல் மூலம் மட்டும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (வெளிநாட்டு கரன்சி மற்றும் வெள்ளி, தங்க நகைகள் போக) வருமானம் கிடைத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக