கடலூர்:
கடலோரக் காவல்படை ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், புதன்கிழமை கடலூரில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். கடலோரக் காவல் படை ஐ.ஜி.யை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் வரவேற்றார். பின்னர் கடலூர் துறைமுகத்துக்குச் சென்று, கடலோரக் காவல் பணிகளை ஆய்வு செய்தார். கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடலோரக் காவல் கண்காணிப்புக் பணிகளுக்காக வழங்கப்பட்டு உள்ள அதிநவீனப் படகையும் ஐ.ஜி. பார்வையிட்டார். பின்னர் ஐ.ஜி. செய்தியாளர்களிடம் கூறியது:
கடலூர் முதல் தரங்கம்பாடி வரை கடற்பகுதியில் முழு ஆய்வு செய்ய இருக்கிறேன். கடலோரக் காவல் படையினரின் பணிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் போலீசாரும் உறுதுணையாக உள்ளனர். கடலோரக் காவல் நிலையங்கள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தேவைப்பட்டால் உடனடியாகத் திறக்கப்படும்.
கடலோரக் காவல் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது இல்லை. அவ்வப்போது தேவைப்பட்டால் விசாரணை மட்டுமே செய்கிறோம். நாட்டின் பாதுகாப்புக்கு முழுமையாக மீனவர்களையே நம்பி இருக்கிறோம். அவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது, சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் கடலோரக் காவல் படையினருக்கு உடனடியாக 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். நமது கடலோப் பகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஐ.ஜி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக