தமிழகத்தில் இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் மரக்களஞ்சியம்.
சிதம்பரம்:
உணவு தானியங்களை இயற்கை முறையில் பாதுகாக்க "மரக்களஞ்சியம்' எனும் முறை விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.
உணவு தானிய விற்பனை சந்தைகளில் ஏற்படும் தொடர்ச்சியான விலை ஏற்ற, இறக்கங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்களை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. நெல் மற்றும் சிறு தானியங்கள் விளைச்சல் முடிந்து அறுவடைக் காலத்தில் குறைந்த விலையே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் அறுவடைக்கு பிந்தைய வரத்துகள் வெகுவாக குறைந்த நிலையில் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயருகிறது. இடைத்தரகர்கள், வியாபாரிகள், தனியார் வேளாண் நிறுவனங்களே அதிகளவு பொருளாதார லாபங்களை பெரும் நடைமுறை சூழல் நிலவுகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள், நலன்களை பாதுகாக்க பாரம்பரியமிக்க மரக்களஞ்சியம் பெரிதும் உதவியாக இருக்கும்.
சேமிப்பு முறைகள்:
இயற்கை முறையில் உணவு தானியங்களை மரக்களஞ்சியம் மூலம் பாதுகாக்கலாம். சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மரக்களஞ்சியங்களை தேர்வு செய்து விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும். முதலில் மரக்களஞ்சியம் உறுதியான மரத்தால் செய்யப்பட்டு துவாரங்கள் இல்லாமல் இருத்தல் வேண்டும். மரக்களஞ்சியம் வடிவமைப்புகள் மாறுபட்டாலும் விவசாயிகள் தங்கள் பண்ணை வீடுகளில் மற்றும் சிறு வீடுகளில் எளிதாக வைக்கும் வண்ணம் உள்ள வடிவமைப்புகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது. சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள மரங்களைக் கொண்டு தச்சர்கள் மூலம் தேவைக்கேற்ப மரக்களஞ்சியங்களை தேவையான வடிவமைப்பில் செய்து கொள்ளலாம்.
சாகுபடி பணி முடிந்து அறுவடைப் பணிகள் துவங்கும் போது விவசாயிகள் மரக்களஞ்சியத்தை நன்றாக சுத்தம் செய்து வெயிலில் வைக்க வேண்டும். பின்னர் புங்கன் எண்ணெய்யை ஒரு துணி கொண்டு மரக்களஞ்சியத்தின் உள்ளே நன்றாக தடவ வேண்டும். புங்கன் எண்ணெய் வாசனையே பல உணவு தானியங்களை தாக்கும் சேமிப்பு பூச்சிகளை விரட்டிவிடும் தன்மை கொண்டது. பின்னர் நன்றாக வெயிலில் காய வைக்கப்பட்ட பதர் இல்லாத உணவு தானியங்கள் வேப்ப இலை, புங்கன் இலை அல்லது நொச்சி இலைகளுடன் கலந்து மரக்களஞ்சியங்களில் பல பருவங்களுக்கு சேமித்து வைக்கலாம். மிக நீண்ட காலத்துக்கு உணவு தானியங்களை விவசாயிகள் சேமிக்க விரும்பினால் மரக்களஞ்சியங்களில் இருந்து வெளியில் எடுத்து நன்றாக சுத்தம் செய்துவிட்ட காய்ந்த நொச்சி, வேம்பு மற்றும் மஞ்சள் (சிறிய துண்டுகள்) போட்டு மீண்டும் மூடிவிட வேண்டும். மரக்களஞ்சியத்தை விவசாயிகள் தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் மண் தொடர்பு இல்லாத வகையில் அமைக்க வேண்டும்.
பிற பயன்கள்:
சிறு விவசாயிகள் வேளாண் பொருள்களை குறைந்த செலவில் இயற்கை முறையில் பாதுகாத்து வேளாண் சந்தைகளில் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். பெரு விவசாயிகள் மரக்களஞ்சியம் வாயிலாக விதை நெல்லை எளிதாக பாதுகாத்து பயன்பெறலாம். சிறு மற்றும் குறு தானியங்கள் மரக்களஞ்சியம் வாயிலாக நீண்டநாள் பாதுகாத்து வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும். எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று தரும் மரக்களஞ்சியத்தை பயன்படுத்தி வளம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக