வயலில் கரும்பு வெட்டும் இயந்திரம். கரும்பு சோகைகளை சிறிய துண்டுகளாக்கி உரமாக்கும் இயந்திரம்.
கடலூர்:
தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
கரும்பு விலை டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாலும், 10-20 சதவீதம் இயந்திரங்களைப் பயன்படுத்தி கரும்பு நடவு, களை எடுத்தல், கரும்பு சோகையை துண்டுகளாக்கி உரமாக்குதல் போன்றவை குறைந்த செலவில் நடைபெறுவதாலும், இந்த பரப்பளவு அதிகரித்துள்ளதாக வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய சர்க்கரை ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவை நாளொன்றுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரை கரும்பு அரைக்கும் திறன் கொண்டவை. இவற்றையும் சேர்த்து தற்போது, தமிழகத்தில் 44 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 3 ஆலைகள் இயங்கவில்லை. இயங்கும் 41 சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறன், நாளொன்றுக்கு 1.18 லட்சம் டன்கள்.÷தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகள் கரும்பு பயிரிடுகிறார்கள். கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் இருந்ததால் முந்தைய 5 ஆண்டுகளில், தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு 40 சதவீதம் அளவுக்குக் குறைந்தது. மேலும் விவசாயத் தொழிலில் நிலவி வரும் ஆள்பற்றாக்குறையும் மின்வெட்டும் தமிழக கரும்பு விவசாயத்தை பாதிக்கத் தொடங்கியது.
அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நடப்பு ஆண்டு கரும்பு அரவைப் பருவத்துக்கு, கரும்பு விலை, வண்டி வாடகையையும் சேர்த்து, டன்னுக்கு ரூ. 2 ஆயிரம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு கரும்பு விலை டன்னுக்கு ரூ. 1,537-1,540 வரை இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலை கூடுதலாகவும், காலதாமதமின்றி முன்னரே அறிவிக்கப்பட்டதாலும், விவசாயிகளிடையே கரும்பு பயிரிடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் விளைவாக தமிழகத்தில் சென்ற ஆண்டு 3.20 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பளவு, இந்த ஆண்டு 3.40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டு 30,221 ஹெக்டேராக இருந்தது இந்த ஆண்டு 34 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகளில் சராசரியாக 130 நாள்கள் மட்டுமே கரும்பு அரவை நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் 170 நாள்கள் அரவை நடைபெற்றது. நடப்பு ஆண்டில் தமிழக சர்க்கரை ஆலைகளில் 170 நாள்கள் கரும்பு அரவை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் சர்க்கரை ஆலை, கடந்த ஆண்டு 6.72 லட்சம் டன் கரும்பு அரைத்தது. இந்த ஆண்டு 8.5 லட்சம் டன்னுக்கு மேல் அரைக்க உத்தேசித்து உள்ளது.
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கடந்த ஆண்டு 9.23 லட்சம் கரும்பு அரைத்தது. இந்த ஆண்டு 12 லட்சம் டன் அரைக்க திட்டமிட்டு உள்ளது.÷விவசாயத் தொழிலில் ஏற்பட்டு வரும் ஆள் பற்றாக்குறை, கரும்பு விவசாயத்தை பெரிதும் பாதித்தது. கரும்பு வெட்டுக் கூலியாக மட்டும் டன்னுக்கு ரூ. 400 முதல் ரூ. 800 வரை கொடுக்க வேண்டியது இருக்கிறது. ஆனால் இப்பிரச்னையில் இருந்து தமிழக விவசாயிகள், இயந்திரமயமாதல் மூலம் தற்போது விடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். கரும்பு வெட்டும் இயந்திரங்களை அனைத்து சர்க்கரை ஆலைகளும் வாங்கி வைத்து,
விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கி வருகின்றன. இதனால் வெட்டுக்கூலி டன்னுக்கு ரூ. 200 ஆக்க குறைந்து இருக்கிறது. மேலும் கரும்பு நடவு, களை எடுத்தல், கரும்பு சோகையை துண்டுகளாக்கி உரமாக்குதல் போன்ற கருவிகளையும், சொட்டு நீர்ப்பாசன முறைகளையும் விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கரும்பு விவசாயத்தில் செலவு குறையத் தொடங்கி இருக்கிறது. இயந்திரங்களின் பயன்பாடு 10 முதல் 20 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
இது குறித்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயலர் விருத்தகிரி கூறுகையில்,
"விவசாய உற்பத்தி 1.6 சதவீதத்துக்குக் குறைந்து விட்டது. விவசாய உற்பத்தியைப் பெருக்க இயந்திரமயமாதல் கட்டாயம் ஆகிவிட்டது. இயந்திரங்களின் விலை அதிகமாக உள்ளது. கரும்பு அறுவடை இயந்திரத்தின் விலை ரூ. 1.5 கோடி வரை உள்ளது. தொழில்துறைக்கு அரசு பல சலுகைகளை அளிப்பதுபோல், வேளாண் இயந்திரங்களுக்கு விற்பனை வரி, சுங்கவரி, இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் அளவு குறுகி இருப்பதும் இயந்திரங்களை பயன்படுத்த தடையாக இருக்கிறது. எனவே விவசாயிகள் கூட்டுப் பண்ணை விவசாயத்துக்கு மாறியாக வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக