உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

மின் கட்டணம் உயர்ந்தது



 
 
       வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.1 கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் இந்தப் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.
 
            இந்தக் கட்டணம் 31.3.2011 வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் சனிக்கிழமை தெரிவித்தார் .600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை.
 
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன், உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது:
 
            தமிழ்நாடு மின்சார வாரியம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 ஜனவரி 18-ம் தேதி மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதன் மீது பொதுமக்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. 
 
ஆகஸ்ட் முதல் நடைமுறை: 
 
           அதைத் தொடர்ந்து புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். கட்டண உயர்வு இல்லை: இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டுத் தலங்கள், வேளாண் மின் நுகர்வோர் ஆகியோருக்கு எந்தவிதமான மின் கட்டண உயர்வும் இல்லை. 
 
ரூ.1 கட்டணம் உயர்வு: 
 
               இரண்டு மாதத்துக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் மின் நுகர்வோரில், உயர் அழுத்த மின் வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் மற்றும் தாழ்வழுத்த வகையினருக்கு (எல்.டி.) யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
 
40 காசுகள் உயர்வு:  
 
            இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடிசைத் தொழில் மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் மட்டும் உயர்த்தப்படுகிறது.÷இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு கட்டண உயர்வு இல்லை. 
 
வணிக மின் நுகர்வோர்:  
 
              வணிக மின் நுகர்வோரில் உயர் அழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 80 காசுகள் செலுத்துவர். வணிக மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 70 காசுகள் செலுத்துவர்.÷உயர் அழுத்த வகை சினிமா திரையரங்கினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு 200 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் (தாழ்வழுத்த வகை) வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. 
 
பெட்டி கடையினருக்கு ரூ.1 குறைப்பு: 
 
           பொதுமக்களின் கருத்துக் கேட்பில் சிறு கடை வியாபாரிகள் அதாவது பெட்டி கடை நடத்துவோர் ரூ.1 குறைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.÷அதன்படி, 2 மாதத்துக்கு 100 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சிறு கடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது. 
 
 தனியார் கல்வி நிறுவனங்கள்:  
 
           தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி  நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
 
அரசின் மானியம் ரூ.1,652 கோடி: 
 
          வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் முதல் ரூ.1.70 வரையிலும், கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.10 முதல் ரூ.1.30 வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.40 மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கு குதிரைசக்தி ஒன்றுக்கு ரூ.250-ம் அரசு மானியத் தொகை வழங்குகிறது. நடப்பு ஆண்டுக்கான அரசின் மொத்த மானியத் தொகை ரூ.1,652 கோடியாகும். 
 
ரூ.1,651 கோடி வருவாய்: 
 
            புதிய மின் கட்டணம் அமலுக்கு வரும்போது ஓராண்டுக்கு ரூ.1,651 கோடி வருவாய் கிடைக்கும். மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.6,451 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை: மாநிலத்தில் சுமார் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வில் மாற்றம் இல்லை. 600 யூனிட்டுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் 5 லட்சத்து 15,299 மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் மாற்றம் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். கட்டணம் குறித்த முழு விவரங்களை www.tnerc.gov.in.​  என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior