கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி மண்டல மேலாளரிடம், ஆலோசனைக்குழு உறுப்பினர் மனு கொடுத்தார்.
இது குறித்து தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவக்குமார் கொடுத்துள்ள மனு:
விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை அமைக்கும் முன்பு அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப் புலியூரில் நின்று சென்றன. திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனும், பஸ் ஸ்டாண்டும் அருகருகே உள்ளது. மேலும் மாவட்ட தலைநகரமாக இருப்பதாலும் பயணிகள் அதிகளவு ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். அகல ரயில்பாதை பணிக்கு பின்னர் விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. மேலும் பாடல் பெற்ற ஸ்தலங்களான பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் ஆகியவை அருகில் உள்ளன. இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த கோவில்களுக்கு வந்து செல்கின்றனர். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையில் அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த வழியில் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்களால் பெரிதும் பயன்பெற்றனர். மேலும் காலையில் இயக்கப்பட்ட ரயிலால் வேலைக்கு செல்லும் அலுவலர்களும் பயன் பெற்றனர்.
எனவே சிதம்பரத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து புறப்பட்ட ரயிலை மீண்டும் இயக்கவும், அலுவலர்கள் பயன்பெறும் வகையில் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சிதம்பரத்திற்கு காலை 9.30 மணிக்கு நின்று புறப்படுமாறு மற்றொரு ரயிலையும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலில் தாம்பரத்திற்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர்.இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காதது பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது. எனவே இந்த முக்கிய ஊர்களில் விரைவு ரயிலை நிறுத்தி செல்லவேண்டும் என மண்டல மேலாளரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக