தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது
.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வால் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை; 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்குத்தான் ரூ.1 கூடுதல் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 3.21 லட்சம் பேர், 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட்டுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் பொருந்தும்.
புதிய மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?
இப்போது 60 நாள்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக மின் நுகர்வோர் ஒருவரின் வீட்டில் இரண்டாவது மாதத்தில் 20-ம் தேதி மின் நுகர்வு கணக்கு (மீட்டர் ரீடிங்) எடுக்கப்படுகிறது. உதாரணத்துக்கு மொத்தம் 60 நாள்களுக்கு சேர்த்து 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த 600 யூனிட்டை, 60 நாள்கள் என கணக்கிட்டு வகுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு நாளுக்கு சராசரியாக 10 யூனிட்டுகள் மின்சாரத்தை நுகர்வோர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவரும்.
இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய தேதி வரை உதாரணமாக 40 நாள்கள் வரை நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்தை 40 நாள்களாக கணக்கிட்டுக் கொண்டு, 10 யூனிட்டுகளுடன் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் 400 யூனிட்டுகளை கொண்டு, முதல் 40 நாள்களுக்கு பழைய கட்டணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள 20 நாள்களுக்கு அதாவது 200 யூனிட்டுகளை புதிய கட்டணம் அமலாகும் தேதியில் இருந்து கணக்கிட்டு ரூ. 1 கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக