உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

சமச்சீர் கல்வி திட்டத்தில் பாடம் நடத்த உத்தரவு 30ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்

கடலூர் :

                      சமச்சீர் கல்வி முறைக்கான பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியலில் மாதிரிக்காக இரண்டு பாடங்கள், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் பாடத்தை நடத்தி மாணவர்களின் கற்கும் திறனையும், ஆசிரியர்களின் கருத்தையும் அறிய, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு பாடத்திட்டத்தில் நடைபெறுவதை தவிர்த்து, ஏழை, எளியவர்கள் என அனைவரும் ஒரே மாதிரியாக கற்க வேண்டிய சூழல் ஏற்படுத்த வேண்டும். ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.


                           இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வியைக் கொண்டு வர அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன் பாடங்களை இணைத்து ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைத்து பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. பின்னர் மின் அஞ்சல் மூலம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை ஏற்ற பாடத் திட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் கல்வி ஆண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

                             முதல் கட்டமாக ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மாதிரிக்காக இரண்டு பாடங்களை, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் நேற்று முன்தினம் இரவு அனுப்பப்பட்டது. இதுகுறித்த தகவல், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு நேற்று காலை தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டு பாடங்களையும் அரையாண்டு விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து, அனுபவமுள்ள ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தி மாணவர்கள் கற்கும் திறனை கண்டறியவும், ஆசிரியர்களின் கருத்துக்களையும் வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.சமச்சீர் கல்வி முறை என்பது அனைத்து ஆசிரியர்கள், கல்வியாளர்களால் வரவேற்கக் கூடிய ஒன்று. ஆனால், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தாற் போல் இரண்டு நாட்களுக்கு முன் பாடத்திட்டத்தை அனுப்பி, அரையாண்டு விடுமுறையில் நடத்தி அதற்கான முடிவுகளை 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என நினைப்பது, ஆசிரியர்கள் மத்தியில் சற்று தொய்வை
ஏற்படுத்தியுள்ளது.

                               அரையாண்டு விடுமுறையில் மாணவர்களை தேடிப் பிடித்து பள்ளிக்கு கொண்டு வருவது சிரமம். மேலும், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாடத்தை ஆசிரியர்களுக்கு வழங்கி, அவர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவை.அது மட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அரையாண்டு தேர்வின் போது விடுமுறை விடப்பட்டது. இந்த தேர்வுகள் ஒரு சில மாவட்டங்களில் அரையாண்டு விடுமுறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களை அறிய வரும் 30ம் தேதி என்பதை நீட்டிக்க வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior