சிறுபாக்கம் :
மங்களூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தற்போது வரகு தானியம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம், மங்களூர், மலையனூர், அரசங்குடி, அடரி, களத்தூர், கழுதூர், வப்பூர் அடுத்த பெரிய நெசலூர், கீழ் ஒரத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டு சோளம், வரகு தானியங்களையே பயிரிட்டு வந்தனர்.
அப்பகுதி மக்கள் இரவில் வரகு சாப்பாடும், பகலில் நாட்டு சோள கூழ் உண்டு வந்தனர். இதனால் தேக ஆரோக்கியத்துடன் சர்க்கரை, காசநோய், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட நோய்கள் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ்ந்து வந்தனர்.அதன்பிறகு இப்பகுதியிலும் உணவு முறையில் மாற்றம் வந்ததால் வரகு, நாட்டு சோளம் பயிரிடுவது படிப்படியாக குறைந்தது. அதற்கு பதிலாக மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்களையே உற்பத்தி செய்திட ஆர்வம் காட்டினர். இதனால் வரகு கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனையும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து வரகு அரிசியின் தேவையும் அதிகரித்தது.இதனால் மங்களூர் பகுதியில் குறைந்த அளவில் அறுவடை செய்யப்படும் வரகு தானியத்தை தேனி, பரமக்குடி பகுதி வியாபாரிகள் நெல் விலைக்கு இணையாக 800 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கினர்.நன்செய் நிலங்களில் அதிக செலவு செய்து பயிரிடப்படும் நெல்லுக்கு இணையாக மானாவாரி நிலங்களில் குறைந்த செலவில் பயிரிடப்படும் வரகு தானியத்திற்கு விலை கிடைப்பதை அறிந்த மங்களூர் ஒன்றிய விவசாயிகள் தற்போது வரகு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக