பண்ருட்டி :
பண்ருட்டியில் இரு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி 11 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரும், இவரது மனைவி லதாவும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் தெருக்கதவை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தெருக்கதவை உடைத்துக் கொண்டு வீட் டினுள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் மற்றும் லதா அணிந்திருந்த இரண்டரை சவரன் தாலி சரடை அறுத்தனர். இருவரும் கூச்சலிட்டனர்.
ஆனால் அந்த தெருவில் இருந்த 7 வீடுகளின் கதவுகளும் வெளிப் பக்கம் தாழ்ப்பாள் போட்டு துணி மற்றும் சைக்கிள் செயின் கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதனால் எவரும் ஓடி வரமுடியவில்லை. இந்நிலையில் பண்ருட்டி விழமங்கலம் ராமன் தெருவை சேர்ந்த தி.மு.க., கிளை செயலாளர் சவுந்தர் ராஜன்(42), அவரது மனைவி மகேஸ்வரி (32), தாய் காசியம்மாள் (72) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் வெளிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல், தனியாக தூங்கிக் கொண்டிருந்த காசியம் மாளை தாக்கினர். சத்தம் கேட்டு எழுந்து வந்த சவுந்தர்ராஜன் மற்றும் மகேஸ்வரியை மர்ம நபர் கள் நான்கு பேரும் சேர்ந்து உருட்டு கட்டைகளால் தாக்கினர். பின்னர் மகேஸ்வரி அணிந்திருந்த ஐந்து சவரன் தாலியை அறுத்தனர். இருவரும் கூச்சலிடவே, தெரு மக்கள் கூடுவதற்குள் மர்ம ஆசாமிகள் நான்கு பேரும் தப்பியோடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த சவுந்தர்ராஜன், மகேஸ்வரி ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து சவுந்தர்ராஜன் கூறுகையில், வீட்டினுள் வந்த கொள்ளையர் கள் நான்கு பேரும் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தனர். எங்கள் முகத்தில் டார்ச் லைட் அடித்தனர். நாங்கள் நிலை குலைந்ததும், எங்களை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு, எனது மனைவி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தாலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என்றார். தகவலறிந்த எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இரு கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக