கடலூர்:
மானிய விலையில் பவர் டில்லர் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கடலூர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்:
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்: கடலூர் மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக, ரூ.448.5 கோடி பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய வீராணம் திட்டத்தில் 42 பணிகள் ரூ.24 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கிறது.ஆனால், கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. வாய்க்கால்களில் தற்போது இருக்கும் அகலப்படியே மராமத்துப் பணிகள் செய்யப்படுகிறது. பதிவேடுகளில் உள்படி அளந்து முழுமையான அகலத்துக்கு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மானிய விலையில் பவர் டில்லர் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆண்டு முழுவதும் அதிகப் பரப்பளவில் விவசாயம் நடைபெறும் கடலூர் மாவட்டத்துக்கு 40, விழுப்புரம் மாவட்டத்துக்கு 82, நாகை மாவட்டத்துக்கு 70 ஒதுக்கப்பட்டு உள்ளது. பவர் டில்லர் ஒதுக்கீட்டில் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கான்சாகிப் வாய்க்கால் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள நவரைப்பட்ட நெல் பயிருக்கு, ஏப்ரல் 10-ம் தேதி வரை கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும்.
மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் டி.ரவீந்திரன்:
வெள்ளப் பாதிப்பு திட்டப் பணிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஏரிகள் மராமத்துப் பணி பாதியில் நின்றுவிட்டது. வெள்ளாற்றின் கரையோர நிலங்கள், அரித்துச் செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கிள்ளை பெரிய வாய்க்காலை மராமத்து செய்ய வேண்டும். மராமத்துப் பணிகளை ஜூன் மாதத்துக்கு முன்பே முடிக்க வேண்டும்.
விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்:
விருத்தாசலம் நகராட்சிக் கழிவுநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி, சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களை பாழாக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நில உடைமையாளர்கள் சங்கச் செயலாளர்
கொத்தட்டை ஆறுமுகம்:
பெண்ணாடம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை ஏற்படுத்த வேண்டும்.
பட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடபதி:
சொட்டுநீர் பாசனத்துக்கு மானியம் வழங்க அரசு நிர்ணயித்து இருக்கும் செலவுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கு எந்த நிறுவனமும் சொட்டுநீர் பாசன கருவிகளை அமைத்துத் தர முன்வரவில்லை. கூடுதல் செலவாகிறது. செலவுத் தொகையை அரசு உயர்த்த வேண்டும்.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்:
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வீராணம் நீர் காலதாமதமாக திறக்கப்பட்டதால், 600 ஏக்கர் நெல் பயிருக்கு ஏப்ரல் 15 வரை தண்ணீர் வழங்க வேண்டும்.
வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் சோமசுந்தரம்:
பெண்ணாடம் சர்க்கரை ஆலை அறிவித்தபடி மானியம் மற்றும் சலுகைகளை வழங்கவில்லை. அறிவித்தபடி கரும்பு அறுவடை இயந்திரமும் வழங்கவில்லை. எனவே ஆலை நிர்வாகத்தை அழைத்துப் பேசி மானியம் கிடைக்கவும், கரும்பு அறுவடைக்கு இயந்திரம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக