கடலூர் :
உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கடலூர் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
மத்திய அரசு 2010-11 நிதி ஆண்டிற்கு உரமானியம் உரத்தில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்க ஆணை பிறப்பித் துள்ளது. அதன்படி ஒரு கிலோ தழைச் சத்து 23.23 ரூபாய், மணி சத்து 26.28, சாம்பல் சத்து 24.49, கந்தக சத்து 1.78 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. வரும் ஏப் 1ம் தேதி முதல் ஒரு டன் டி.ஏ.பி., உரம் 16,268 ரூபாய், மானோ அம்மோனியம் பாஸ்பேட் 16,219 ரூபாய், டிரிபில் சூப்பர் பாஸ்பேட் 12,087, முயூரேட் ஆப் பொட்டாஷ் 14,692 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதே போல் காம்ப்ளக்ஸ், அம்மோனியம் சல்பேட் உரங்களுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. உர விலை நிலைபாடுகளில் கடந்தாண்டு கொள் முதல் செய்து இருப்பில் உள்ள உரங்கள் கணக்கெடுத்து, பழைய விலைக்கே விற்பனை செய்யவும், மானிய உரங்கள் தட்டுபாடின்றி, அரசு நிர்ணய விலைக்கு தேவையான காலங்களில் விவசாயிகளுக்கு வழங்கிட உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உர சட்டத்தை மீறும் விற்பனையாளர்கள் மீது அத்தியாவசிய குடிமை பொருள் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் உரம் பற்றி விவரங்களுக்கு கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலக தொலை பேசி எண் 04142-290658 ஐ தொடர்பு கொள்ளவும்.