கடலூர்:
தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான இரண்டு நாள் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம் கடலூர் ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற அரசுத்துறை அலுவலர்கள் 100 பேருக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
மனிதனின் எண்ணங் களை சுமந்து செல்லும் வாகனம் மொழி. பெரும் பாலான அலுவலகங்களில் ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் குறைவாகவே உள்ளது. தமிழில் கூர்மைத் தன்மை இல்லாததால் அதிலிருந்து தப்பிப்பதற்கே ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர்.
தமிழில் சுத்தமாக எழுத வேண்டுமெனில் கோப்புகளில் உள்ள பொருள்கள் ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். ஒரு விஷயத்தைச் சொல்ல விரிவாக எழுதாமல் சுருக்கமாக எழுத வேண்டும். பிழை இன்றி தமிழை எழுதுங்கள். சரியாக சிந்தித்தால் குறையற்றவர்களாக இருப்பீர்கள். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்கள் தஞ்சாவூர் கபிலர், பெரம்பலூர் தம்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அருண்ரசீத் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக