
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய வகை நூல்களின் இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. மாணவர்களும், பொதுமக்களும் அரிய வகை நூல்களை ஆர்வமுடன் பார்த்து வியந்தனர். ஆண்டுதோறும் உலக புத்தக தினம் ஏப். 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய வகை நூல்களின், இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கன்னிமாரா பொது நூலகம் மற்றும் 31 மாவட்ட மைய நூலகங்களை இணைக்கும் திட்டத்தின், முதல் முயற்சியாக கன்னிமாரா நூலகத்திலுள்ள நூல்களின் பட்டியலை இணையதளம் மூலம் அறியும் வசதியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.முதன் முதலில் (1608ம் ஆண்டு) ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட 'ஹோலி பைபிள்', தமிழில் முதன் முதலில் அச்சேறிய (1781ம் ஆண்டு) 'ஞானமுறமைகளின் விளக்கம் 1,162 பக்கங்கள் கொண்ட சென்னை மாகாணம் பற்றிய நூல்கள்' என மொத்தம் 116 அரிய வகை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அரிய நூல்கள், பிரமாண்ட நூல்களையும் கண்டு மாணவர்களும், பொதுமக்களும் வியப்புடன் பார்வையிட்டனர். அரிய நூல்கள், எழுதியவர் பற்றிய விவரங்களை மாணவர்கள் குறிப்பெடுத்துச் சென்றனர்.இரண்டு நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அரியவகை நூல்களை, பொதுமக்கள் பார்க்கலாம் என கன்னிமாரா நூலகம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக