நெய்வேலி:
நெய்வேலி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் சில மூடிய நிலையிலேயே இருப்பதால் பொதுமக்கள் பொருள்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நெய்வேலி நகரில் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் நெய்வேலி வட்டம் 5, 6, 7, 10 மற்றும் மந்தாரக்குப்பத்தில் உள்ள கடைகள் பெரும்பாலான நாள்களில் மூடியே இருப்பதால் அரசு மானிய விலையில் வழங்கும் சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாதத்தின் முதல் இரு தினங்கள் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக கடை மூடப்படுவது வழக்கம். ஆனால், நெய்வேலி வட்டம் 5-ல் உள்ள ரேஷன் கடை இம்மாத தொடக்கத்திலிருந்து இதுவரை திறக்கப்படவில்லை.
நெய்வேலி நகரில் பெரும்பாலானவர்கள் பணிக்குச் செல்லக்கூடியவர்கள். அவர்கள் பணி முடிந்து பிற்பகலில் சற்று ஓய்வெடுத்த பின்னர் மாலை நேரத்தில்தான் பொருள்களை வாங்கச் செல்வர். ஆனால், மாலையில் கடை நேரம் முடிந்து மூடப்படுவதால் அவர்கள் பொருளை வாங்கமுடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே வீட்டிலுள்ள பெண்கள்தான் ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களை வாங்குகின்றனர். ரேஷன் கடையிலே ஒருநாள் சர்க்கரை, மற்றொரு நாள் கோதுமை என்று தினம் ஒரு பொருள் என தவணை முறையில் பொருகள் விநியோகிக்கப்படுவதால் பெண்கள் ரேஷன் கடைக்கு நடந்து நடந்தே அலுப்புத் தட்டிவிடுகிறது.
அதுவும் ரேஷன் கடை தொடர்ந்து திறந்திருந்தாலும் பரவாயில்லை. ஒருநாள் திறந்திருந்தால் மறுநாள் கடை மூடிய நிலையில் இருப்பதால் பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. கடை திறந்திருந்தாலும் அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்குள் அப்பப்பா என்றாகிவிடுகிறது. சில நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதைக் கூட தாங்கிக்கொண்டு பொருளை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக நெய்வேலி பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
நெய்வேலி வட்டம் 6-ல் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். அவர்களில் 200 பேருக்கும் குறைவாகவே சர்க்கரை கிடைக்கிறது. மற்றவர்கள் வெளி மார்க்கெட்டில்தான் சர்க்கரை வாங்குகிறனர். இங்கிருந்து சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் கடத்தப்படுவாதாக கூறப்படுகிறது. அவ்வப்போது மூடப்படும் ரேஷன் கடைகளை நிரந்தரமாக திறக்கவும், ரேஷன் கடைகளில் இருந்து பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் வழிவகை செய்வாரா வட்ட வழங்கல் அதிகாரி?
பொது அறிவிற்கு:
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் - தமிழ்நாடு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக