சிதம்பரம் கனகசபை நகர் 8-வது கிராஸ் ரோட்டில் சாலையின் குறுக்க திறந்தவெளி சாக்கடை அமைத்து கழிவுநீரை பாலமான் ஓடைக்கு கொண்டு செல்கின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் பழுதடைந்ததால் நகராட்சி நிர்வாகத்தினர் புதை சாக்கடை நீரை திறந்தவெளி சாக்கடை அமைத்து பாசனக் வாய்க்காலான பாலமான் ஓடையில் நீரைவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர். சிதம்பரம் நகரின் தெற்கு பகுதியில் வெள்ளந்தாங்கிஅம்மன் கோயில் அருகில் உள்ள மதகு வழியாக கீழப்பாலமான் ஓடைக்கு பாசனநீர் செல்கிறது. சிதம்பரம் நகரில் கனகசபைநகர், ராஜாநகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள புதைசாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு அதன்மூலம் பாலமான் ஓடையில் கொண்டு விடப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்து அப்பகுதியில் மக்கள் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பால் அல்லல்படுகின்றனர். மேலும் பாசனத்துக்காக செல்லும் பாலமான ஓடையில் இந்த கழிவுநீர் கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் பகுதியில் நேரடி ஆய்வு செய்து பாசன வாய்க்காலில் கழிவுநீரை கொண்டு விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூக பாதுகாப்பு பேரவை தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக