கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக கொண்டு வரப்பட்டிருக்கும் ராட்சதக் குழாய்கள்.
கடலூர்:
வடகிழக்குப் பருவமழை காலம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மீண்டும் தொய்வடைந்து மந்தமாகி விட்டன.ரூ. 44 கோடி மதிப்பீட்டில் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனால் திட்டம் இன்னமும் முடிந்த பாடில்லை. 18 மாதத்தில் இப்பணி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
90 சதவீதப் பணிகள் முடிந்து விட்டதாக இத்திட்டத்தை நிறைவேற்றும் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது. ஆனால் 50 சதவீதப் பணிகள்தான் முடிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. 8 கழிவுநீரகற்று நிலையங்களில் 4 மட்டுமே முடிவடைந்து உள்ளன. 4 கழிவுநீரகற்று நிலையங்களுக்கு இன்னமும் இணைப்புச் சாலைகளுக்கான நிலம் கையகப்படுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.சாலைகளில் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டும், அவை பல இடங்களில் இன்னமும் இணைக்கப்படவில்லை.
பிரதான வேலையான தேசிய நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கும் வேலை இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. இத்திட்டத்தில் கழிவுநீரகற்று நிலைங்களை நவீனப்படுத்தவும், எஞ்சிய பணிகளை முடிக்கவும், மேலும் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்று 2 மாதங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால் தற்போது பணி மிகவும் மந்தமாக நடந்து கொண்டு இருக்கிறது.
இதுகுறித்து பாதாளச் சாக்கடைத்திட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில்,
கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டக் கட்டுமானப் பணிகளில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அவர்களில் பாதிபேர் பணிகளை விட்டுவிட்டுப் போய்விட்டனர். அதுவும் பணிகள் மந்தமாக நடப்பதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்தார். கோடைக் காலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதன் மூலம், வடகிழக்குப் பருவமழை காலத்துக்குள் முடிவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல சாலைகளில் சிறுசிறு வேலைகள் நடைபெறாமல் உள்ளது. உதாரணமாக இரு மேன்ஹோல்களை இணைக்காததால் அந்தப்பகுதி முழுவதும், சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க, கடலூர் நகராட்சியிடம் போதிய நிதி வசதி இல்லை. எனவே ரூ. 25 கோடி மானியத்துடன் கூடிய கடன் வேண்டும் என்று, தமிழக அரசை கடலூர் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இத் தொகை வந்தால்தான் சாலைகள் அமைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மக்கள் பங்களிப்புத் தொகையாக, ரூ. 15 கோடி சேகரிக்க வேண்டும். அதற்கான பணிகள் நடைபெறவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை முடிக்காமல், பொதுமக்கள் பணம் கொடுப்பார்களா என்பதும் சந்தேகமே.90 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டன என்று அனைத்து துறைகளும் ஒரே குரலில் சாதிக்கின்றன. ஆனால் உண்மை நிலையை ஆராய்ந்தால், 50 சதவீதப் பணிகள்தான் முடிவடைந்து இருப்பதாகத் தெரிய வருகிறது. பொதுநல அமைப்புகள் இதற்காக அடிக்கடி போராட்டங்களை நடத்தியும், அரசியில் கட்சித் தலைவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உண்மையில் பாதிக்கப்படுவோர் கடலூர் அப்பாவி மக்கள்தான்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக