பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர்கள்.
நெய்வேலி:
அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதையடுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி பள்ளிக்குச் சென்று அரசு நிர்ணயித்தக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதையடுத்து, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தையே பெற முன்வந்துள்ளது.
நெய்வேலி வட்டம் 25-ல் செயின்ட் ஜோசப் ஆப் குளுனி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த ஆண்டு கல்விக் கட்டணத்தின் முதல் தவணையாக (ஜூன்-செப்டம்பர் இடைப்பட்ட 4 மாதங்களுக்கு) முதல் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை ரூ.4750, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை ரூ.4250 எனவும், 10-ம் வகுப்புக்கு ரூ.5200 எனவும் பள்ளி கட்டண அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் 2 மற்றும் 3-ம் பருவக் கட்டணங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியது.
அரசு ஒரு ஆண்டுக்கு வெளியிட்ட கட்டணத்தை, பள்ளி நிர்வாகம் மாற்றியமைத்து முதல் பருவக் கட்டணம் என வெளியிட்டுள்ளதைக் கண்டு பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அரசு ஒரு ஆண்டுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட 300 மடங்கு உயர்வு கொண்ட கட்டணத்தை அறிவிப்பு செய்துள்ளனர். எனவே, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை அறிவிப்புப் பலைகையில் ஒட்ட வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டனர் பெற்றோர்கள் முற்றுகையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி ஆசிரியர்கள் வகுப்பைப் புறக்கணித்து பள்ளியைவிட்டு வெளியேறினர். இதைத் தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி முன்னிலையில் பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர்கள் பேச்சு நடத்தினர்.
இப்பேச்சின் போது, அரசு அறிவித்த கட்டணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். பருவக் கட்டணம் என்ற கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது. அரசு அறிவித்த கட்டண விவரத்தை பள்ளியின் அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும். மெட்ரிக் பள்ளிகள் மேல்முறையீடு குறித்து பதில் கிடைக்கும் வரை பள்ளிகள் அமைதிகாக்க வேண்டும் என ஆய்வாளர் அருள்மொழி உத்தரவிட்டதையடுத்து, பள்ளி நிர்வாகம் அரசு அறிவித்த கட்டணத்தைப் பெற ஒப்புக்கொண்டது. இதையடுத்து பெற்றோர்கள் ஆய்வாளர் அருள்மொழிக்கும், காவல் ஆய்வாளர் சேகருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து வகுப்பைப் புறக்கணித்த ஆசிரியர்களும் வகுப்புகளுக்குத் திரும்பினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக