உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

தாய்மொழியில் படிக்கும் நூல்களே நினைவில் நிற்கும்: உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்

நெய்வேலி:

            புத்தகங்களை தனது தாய்மொழியில் படித்தால் அவை எளிதில் நினைவில் நிற்கும். எனவே இளைஞர்கள் தாய்மொழியில் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 13-வது புத்தகக் கண்காட்சியின் நிறைவுநாள் விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டார்.

            நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில், இம்மாதம் 9 முதல் 18-ம் தேதி வரை, இப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றது. இப்புத்தகக் கண்காட்சியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, என்எல்சி சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தலைமை வகித்தார். நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளரும், புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழ்செல்வன் வரவேற்றார். 

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன், புத்தகக் கண்காட்சியின் சிறப்பு மலரை வெளியிட்டுப் பேசியது:

              இப் புத்தகக் கண்காட்சிக்கு நான் 2-ம் முறையாக வருகிறேன். இங்கு பார்க்கும் போது மக்களிடம் புத்தகம் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்துவருகிறது. ஒருவர் தனது பாடப்புத்தகங்களை மட்டுமே படித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியாது. பிற புத்தகங்களையும் படித்து, அதில் கிடைக்கும் அறிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டால்தான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். கூடுமான வரையில், அவரவர் தாய்மொழியில் படித்தால் அவை நினைவில் நிற்கும். தமிழக முதல்வர் பல்வேறு புத்தகங்களை படித்து தனது அறிவை வளர்த்துக் கொண்டதால்தான் இன்றும் அவரால் பல விஷயங்களை நினைவுக் கூற முடிகிறது என்றார் வெங்கட்ராமன்.

          நிகழ்ச்சியில், என்எல்சி நிதித்துறை இயக்குநர் சேகர் வாழ்த்துரை வழங்கினார்.விழாவின் போது புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜாவும், சாகித்ய அகாதெமி பதிப்பகத்தாரும்  கௌரவிக்கப்பட்டனர். 

10 தினங்களில் 2.5 லட்சம் வாசகர்கள்... 

            இன்றைய இளைஞர்கள், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், டிவிடி, சிடி, இன்டர்நெட், பென் டிரைவ் என நவீன தொழில்நுட்ப உலகத்துக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களை புத்தகம் பக்கம் திருப்புகிற பணியை கடந்த 13 ஆண்டுகளாக செய்து வருகிறது என்எல்சி நிறுவனம். இந்திய அளவில் சென்னை, கொல்கத்தா, புதுதில்லி புத்தகக் கண்காட்சிகளுக்கு அடுத்தபடியாக திகழும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியைக் காண ஏராளமான வாசகர்கள் கண்காட்சி அரங்கை நோக்கி சாரைச் சாரையாக அணிவகுத்த போதிலும்,பெண்களும், அவர்தம் பிள்ளைகளும் கூட்டம் கூட்டமாக வந்து புத்தகங்களை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

          கூட்டம் கூட்டமாக வருவதைக் காணும் போது, புத்தகப் பதிப்பாளர்களின் எதிர்காலம் வலுவான நிலையில் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. கடந்த 10 தினங்களில் புத்தகக் கண்காட்சியைக் காண வந்திருந்தோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி நிற்கிறது.÷புத்தகக் கண்காட்சியை வெறும் காட்சியாக மட்டும் பார்க்காமல், தங்களுக்குத் தேவையான புத்தகம் எது என்பதை ஆராய்ந்து அதை வாங்கிச் செல்லும் வாசகர்கள் அதிகம். இருப்பினும் பள்ளிப் பாடப் புத்தகங்களும், சமையற்கலை, விடுகதை, ஓவியம் தொடர்பான புத்தகங்களே அதிக அளவில் விற்பனையாவதாகவும், இலக்கியம், நாவல் போன்றவற்றின் விற்பனை மிக அரிதாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

           மேலும் இப்புத்தகக் கண்காட்சிக்கு மேலும் மெருகூட்டக் கூடிய அம்சங்களாக இருப்பவை, அங்காடிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும், பதிப்பாளர்களுக்கு என்எல்சி நிறுவனம் செய்துதருகிற வசதிகளும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால் பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். இதுதவிர புத்தகக் கண்காட்சி அரங்கில் புழுதி ஏற்படாத வண்ணம் தரைகளும் சிமென்டினால் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் களைப்படையாமல் இருக்க தேநீர் அங்காடிகள், சிறுவர், சிறுமியரை மகிழ்விக்கக் கூடிய பொழுதுப்போக்கு அம்சங்கள், சுகாதாரத்தை பேணிக்காக்கிற வகையில் நடமாடும் கழிவறை, அங்காடிகளுக்கு நடுவே இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், செவிக்குத் தேவையானவற்றை வாங்கிய பிறகு, வயிற்றுக்கும் தேவையானவற்றை வாங்கி உண்பதற்கு ஏதுவாக உணவகப் பிரிவு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

             எது எப்படியானாலும், இன்றைய இளைய சமுதாயத்துக்கு புத்தகம் ஒன்று இருக்கிறது. அதில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை வாங்கிப் படியுங்கள் என்று சொல்லாமல் சொல்லும் பணியை அமைதியுடன் செய்து வருகிறது என்எல்சி நிறுவனம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior