உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

கடலூரில் மீனவ கிராமங்களிடையே மோதல்: வீடுகள் சேதம், போலீஸ் தடியடி

கடலூர்:

             கடலூரில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 

            மோதலிலும் போலீஸ் தடியடியிலும் பலர் காயம் அடைந்தனர். கடலூர் சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள் சிறுசிறுத் தகராறுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு, சோனங்குப்பம் மீனவர்கள் சிலர் சிங்காரத்தோப்பு வழியாகச் சென்றபோது, இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், சிங்காரத்தோப்பைச் சேர்ந்த காத்தவராயன் (28), ராணி (46), சோனங்குப்பம் சத்தியன் (28), கவியரசன் (28) ஆகியோர் காயம் அடைந்தனர். 2 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.

               தகவல் அறிந்ததும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்தனர். மேற்கொண்டு மோதலைத் தவிர்க்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் இரு கிராமங்களுக்கும் இடையே சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த சோனங்குப்பம் தங்கமணி (52), சிங்காரத்தோப்பு நித்தியானந்தம் (50), கிராமத் தலைவர் அசோகன் (55) உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர்.மோதல் தொடர்பாக விஜயேந்திரன் (44) கொடுத்த புகாரில், சிங்காரத்தோப்பைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, சிவா, சுப்பிரமணியன், காத்தவராயன் உள்ளிட்டோர் மீதும், தமிழரசி (45) கொடுத்த புகாரில் சோனங்குப்பம் கவியரசன், பாபு, கபிலன் நாகப்பன் உள்ளிட்டோர் மீதும் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். காயம் அடைந்த சத்தியன், காத்தவராயன், மாரிமுத்து மனைவி ராணி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

             இந்நிலையில் இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மேலும் மோசம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, இரு கிராமங்களின் ஊர்ப்பஞ்சாயத்தாரும் திங்கள்கிழமை காலை ஒன்றுக் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், மோதலில் ஈடுபட்டவர்களை மட்டும் காவல் நிலையத்தில் ஒப்படைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  மோதலில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்றும் அவர்கள், போலீஸ் துணைக் கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior