சிதம்பரம், டிச. 20:
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் உள்ள கொள்ளிடக் கரையோரச் சாலைகளை பலப்படுத்தி சீரமைக்க ரூ.108.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குமராட்சி, வல்லம்படுகை, நந்திமங்கலம், வேளக்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் கரையோரம் உள்ள சாலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையின் இடையே வடக்குராஜன் வாய்க்கால், பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. ஆற்று நீரால் சாலையின் இருபுறங்களும் அரிப்பெடுத்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வெள்ளக் காலங்களில் சாலை உடைப்பெடுத்து கிராமத்துக்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சேதமடைந்த சாலைகளின் கரைகளில் தாற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளிடக் கரையை பலப்படுத்தி சாலையை சீரமைக்க வேண்டும் என இம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் பொதுப்பணித் துறையினர் கொள்ளிடக்கரை சாலைகள் சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு முன்மாதிரி வரைவு திட்டத்தை தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பினர். தற்போது அதனடிப்படையில் மத்திய அரசு கொள்ளிடக்கரைகளை பலப்படுத்தி சாலைகளை சீரமைக்க ரூ.108.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பணி மார்ச் மாதம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவையல்லாமல் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படவுள்ளது. இப்பாலம் அமைந்தால் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடக்கரை சாலைகள் பலப்படுத்தப்படும். இதனால் கஞ்சன்கொல்லை, எய்யலூர், முட்டம், குஞ்சமேடு, தில்லைநாயகபுரம், நளன்புத்தூர், முள்ளங்குடி, வல்லம்படுகை, புளியங்குடி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சாலை வசதி பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக