நெய்வேலி, டிச. 19:
2015-ம் ஆண்டில் நமது நாட்டில் சிறுநீரக நோயாளிகளின் சுமார் 7 கோடி அளவுக்கு உயரக்கூடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் எட்வின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தியப் பொறியாளர் கழகத்தின் நெய்வேலிக் கிளையும், நெய்வேலி பொறியாளர் மற்றும் அறிவியலாளர் கழகமும் இணைந்து சிறுநீரகத்தைப் பாதுகாப்பீர் எனும் தலைப்பில் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை நடத்தினர்.
இ தில் என்எல்சி திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி தலைமை வகித்தார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சிறுநீரகவியல் துறைத் தலைவர் டாக்டர் எட்வின் பெர்னாண்டோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசும் போது, நமது நாட்டில் பரம்பரை மூலமாக பரவும் நோய்கள் 43.5 சதவீதமாக இருக்கையில், பிறர் மூலம் பரவாத உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவை 44 சதவீதமாக உயர்ந்துள்ளது. நமது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களும் தான் இதற்கு முக்கியக் காரணம்.
கடந்த 2004-ம் ஆண்டு கணக்கின்படி உலக அளவில் தொற்றுநோய் மூலம் 2 கோடிபேரும், பிறரிடமிருந்து பரவாத நோய் மூலம் 3 கோடி பேரும் இறந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். உயர் ரத்த அழுத்தம், அதிக ரத்தப் போக்கு, சிறுநீரகத்தில் கட்டி, அதிக எடை, அதிக கொழுப்பு, புகைப் பிடித்தல் ஆகியவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்றார் எட்வின் பெர்னாண்டோ.
முன்னதாக நிகழ்ச்சியில் பொறியாளர் கழகத் துணைத் தலைவர் சக்ரவர்த்தி வரவேற்றார், பொறியாளர் மற்றும் அறிவியலாளர் கழகச் செயலர் கென்னடி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக