கட லூர், டிச. 3:
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கேட்டுக் கொண்டார்.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக விளையாட்டு மையங்கள் மற்றும் நூலகங்கள் பயன்பாடு தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது, நூலகங்களைப் பயன்படுத்த வேண்டும். கல்வி கற்பது என்பது கற்றல், கேட்டல், படித்தல் என மூன்று வகைப்படும். படித்தலுக்குப் பயன்படுவது நூலகங்கள்.
இந்த நூலகங்களில் 2 தினசரி மற்றும் 2 வார இதழ்கள் அவசியமாக இருக்க வேண்டும். நூலகங்களில் புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றுகூடி முக்கியப் பிரமுகர்கள் மூலம் நூலகத்துக்குப் புத்தகங்கள் வழங்கும் விழா, நன்கொடையாக புத்தகங்கள் வழங்கும் விழா ஆகியவற்றை நடத்த வேண்டும். நூலகங்களில் புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாராட்டப்படுவார்கள். பொது அறிவுத் திறனை வளர்க்க நூலகங்கள் அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பயில்வதைவிட பொது அறிவை நூலகத்தில் படித்து அதிகம் வளர்த்துக் கொள்ள முடியும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் எஸ்.ராஜஸ்ரீ, உதவித்திட்ட அலுவலர்கள் செல்வபெருமாள், எம்.சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக