இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் சரியாக பராமரிக்கப்படாததால் பக்தர்களும், பொது மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையில் புகழ் பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயில் 7-ம் நூற்றாண்டில் பல்லவர் கால ஆட்சி காலத்தில் கோயிலின் விமானத்தின் நிழல் தரையில் விழாதபடி எண்கணித சாஸ்திரபடி கட்டியுள்ளனர்.இது ராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கு முற்பட்டதும், முதல்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறும், அட்ட வீரட்டத்தில் சிறப்புடையதும், தேவாரம் முதல்முதலில் பாடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டது.இத்தகைய சிறப்புகளை கொண்ட திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் இன்று நிர்வாக சீர்கேடுகளால் சீரழிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து விசாரித்ததில் பக்தர்களும், பொது மக்களும் கூறியது: இக்கோயிலில் விளக்கேற்றவும், அமுது படைக்கவும் பல தர்மசீலர்களால் வழங்கப்பட்ட சுமார் 150 ஏக்கர் நிலம் இருந்தும் பயனற்றதாய் உள்ளது. கட்டளைதாரர்கள் பூஜைக்காக வழங்கும் நிதியிலும் முறைகேடு நடப்பதாகவும், இதனால் ஆலயத்தில் நடைபெற வேண்டிய 6 கால பூஜைகளில் தற்போது 3 கால பூஜைகள் மட்டுமே நடக்கிறது. ஆச்சாரத்துடன் கடவுளுக்கு அமுது படைக்க தயாரிக்கப்படும் உணவை தயாரிக்கக் கூட சுயம்பாகம் ஐயர் இல்லை.÷முதன்முதலில் தேவாரம் பாடப்பட்ட சிறப்புடைய இத்தலத்தில் ஓதுவார் இல்லாததால் கடந்த 16 வருடங்களுக்கு மேலாக தேவாரம் பாடப்படவில்லை. கோயில் சிப்பந்திப் பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதால் கோயிலின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு உடைய இத்தலத்தில் உள்ள தேர் சிதலம் அடைந்து கிடக்கிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருப்பணி குழு அமைக்காததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திருப்பணிகள் இன்று வரை நிறைவு பெறவில்லை. இதனால் வேலை முடிவு பெற்ற ராஜ கோபுரத்தில் மீண்டும் ஆலம் மற்றும் அரச மரங்கள் தழைத்து வளர்ந்து கோபுரத்தை சேதப்படுத்தி வருகின்றன .எனவே திருப்பணிக் குழுவை அமைத்து கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், கோயில் நிலங்களை ஆலய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முறைப்படி சிவனுக்கு 6 கால பூஜை நடத்த இந்து சமய அறநிலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக