ஸ்ரீமுஷ்ணம் :
ஸ்ரீமுஷ்ணத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகமாக உள்ளதால் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணத்தை சுற்றியுள்ள சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், நாச்சியார்பேட்டை, தேத்தாம்பட்டு உள்ளிட்ட 30க் கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தர்பூசணி பயிரிடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகள் கரும்பை பயிரிடுவது முதல் வெட்டுவது வரை லஞ்சம் வழங்குவது உள்பட பல்வேறு சிக்கல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் உள்ளாகினர்.
மேலும் ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு கரும்பு பயிர் செய்தாலும் போதிய விலை கிடைக்காத காரணத்தால் மாற்றுப்பயிர் பயிரிட முடிவு செய்து தர்பூசணி பயிர் செய்தனர். இப்பகுதியில் விளையும் தர்பூசணி மிகவும் சுவையாக இருப்பதால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேடிவந்து தர்பூசணியை கொள்முதல் செய்தனர். இதனால் நாளடைவில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலங்களில் தர்பூசணி பயிர் செய்ய துவங்கினர்.
தற்போது சோழத்தரத்தில் இருந்து பாளையங்கோட்டை வழியாக ஸ்ரீமுஷ்ணம் வரை உள்ள அனைத்து கிராமங்களிலும் தர்பூசணி பயிர் செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இப்பகுதியில் விளைந்த தர்பூசணியை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயிற்கு கொள்முதல் செய்து கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக் கின்றனர். இது கரும்பை விட டன் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கூடுதலாக உள்ளது. மேலும் ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவை விட, தர்பூசணிக்கு மிக குறைந்த அளவே செலவாகிறது. மேலும் பயிரிட்ட 75 நாளில் மகசூல் கிடைப்பதோடு, குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது. மேலும் ஊடுபயிராக ஆறுமாத பயிரான முருங்கை பயிரிடுவதாலும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தர்பூசணி மற்றும் முருங்கை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக