தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையைக் கண்டித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல் 18-ம் தேதி நெய்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2001-2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் இருந்தது. 2006 தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 11 மெகாவாட்டாக இருந்தது. 2005-2010-ம் ஆண்டுகளில் கூடுதலாக 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறனை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், 2006 மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த நான்காண்டு கால தி.மு.க. ஆட்சியில், மின் உற்பத்தி நிறுவு திறன் குறைந்திருக்கிறது.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்கள் அடிக்கடி பழுதடைவது, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைந்திருப்பது, மத்திய அரசு அளிக்க வேண்டிய எரிவாயு ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஆகியவையும் தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின் வெட்டிற்கு முக்கியக் காரணங்கள்.மே மாதம் வரை மின் வெட்டு தொடரும் என்கிறார் மின் துறை அமைச்சர். 2011 வரை மின் நிலைமை சீராகாது என்கிறார் தலைமைச் செயலாளர். இப்போது மின் வெட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் இல்லை என்பது முற்றிலும் தவறானது. தி.மு.க. ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட 2000-2001-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 7 ஆயிரத்து 120 மெகாவாட் என்றும், 2006-2007-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின் உற்பத்தி நிறுவுத் திறன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.மின் உற்பத்தி நிறுவுத் திறனை அதிகரிக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, மாணவர்களின் கல்வி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், மின் பற்றாக்குறையை சீர் செய்ய வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் 18.4.2010 அன்று நெய்வேலியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, நெய்வேலி நகரியத்தில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலையை நான் திறந்து வைக்கவுள்ளேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்