ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள வில்லோ மரங்களில் ஒட்டுத்தாவரங்கள் அதிகரித்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் அரிய வகை மலர், தாவரம், மரங்கள் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. கோடை சீசனுக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன; நூற்றாண்டு கடந்த மரங்களை சுற்றி மலர் தொட்டிகள் வைக்க, பூங்கா நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, ஊட்டியில் சதுப்பு நிலங்கள் குறைந்ததால், இந்நிலங்களில் வளரக் கூடிய வில்லோ மரங்கள், தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குளங்களை சுற்றி வளர்ந்துள்ளன. நீளமான கிளைகளை கொண்ட இந்த மரங்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கின்றன; இந்த மரத்திலிருந்து கிரிக்கெட் மட்டை செய்யப்படுவதால், பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள சில வில்லோ மரங்களில், தற்போது ஒட்டுத் தாவரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த ஒட்டுத் தாவரங்கள் மரத்தின் சக்தியை பயன்படுத்திக் கொண்டு செழிப்பாக வளர்வதால், மரங்கள் பட்டுபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுபடுத்தாவிட்டால், அரு கில் உள்ள மரங்களிலும் பரவி, அந்த மரயினங்களையும் அழித்து விடும் என, இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.