கடலூர்:
கடலூரில் 5 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹவாலா பணம் ரூ. 42 லட்சம், வருமான வரித்துறை அமலாக்கப் பிரிவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் கடந்த 3-ம் தேதி போலீஸôர் ரோந்துப் பணியில் இருந்தபோது, சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த அல்பைசல் (32), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரைச் சேர்ந்த அஷ்ரப் அலி (54), சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த ஈஸ்வர் (42), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகுபர் சாதிக் (44), ஜாகீர் உசேன் (39) ஆகிய 5 பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்து ஹவாலா பணம் (கணக்கில் வராதது) ரூ. 42 லட்சம் கைப்பற்றப்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சுந்தரம் உத்தரவிட்டார்.போலீஸ் கைப்பற்றிய பணம் குறித்து வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமலாக்கப்பரிவு உதவி இயக்குநர் கபீர்தாஸ் தலைமையில் 4 அதிகாரிகள் கொண்ட குழு கடலூர் வந்து, சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரிடமும் விசாரணை நடத்தியது. கைப்பற்றப்பட்ட ரூ. 42 லட்சத்தை ஆய்வு செய்ய அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரம், அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து ரூ. 42 லட்சமும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு போகப்பட்டது. இந்தப் பணம் யாருடையது எந்த வங்கியில் இருந்து, யாரால் பணம் எடுக்கப்பட்டது போன்ற தகவல்களை அமலாக்கப் பிரிவு சேகரிக்க இருக்கிறது. இந்நிலையில் கைதான 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கப் பிரிவு அலவலர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.
downlaod this page as pdf