பூட்டு போடப்பட்டுள்ள கழிவறை மற்றும் இதன் அருகே புதிதாக போடப்பட்டு பயனற்றுக் கிடக்கும் போர்.
பண்ருட்டி:
ஒறையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்தது ஒறையூர் ஊராட்சி. இங்கு மாரியம்மன் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள இப் பள்ளியில் 220-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வசதியும், கழிவறை வசதியும் இல்லை. பள்ளி மாணவர்கள் குடிநீருக்காக பள்ளியை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பின்றி பூட்டு போடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் ஓரத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மாணவர்கள் விபத்தில் சிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறை அப்படியே விட்டுவிட்டனர். இதில் மாணவர்கள் கல் மற்றும் மண்ணை போட்டு விளையாடுவதால் ஆழ்துளை குழாய் தூர்ந்து போயுள்ளது.இப் பள்ளிக்கு உடனடியாக குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
downlaod this page as pdf