"நான் பெரிய ஐயா; ஸ்டாலின் சின்ன ஐயா' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது, தங்களது வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதை முதல்வர் கருணாநிதி இவ்வாறு குறிப்பிட்டார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் தங்களுக்குள்ள கருத்தை திமுக} பாமக ஆகியவை பேரவையில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
இது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:
வேல்முருகன் (பாமக):
பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன. முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வரின் வாகனங்களைக் கூட சோதனையிட்டனர்.அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்திருக்க வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. காவல்துறை நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்கலாம்.
முதல்வர் கருணாநிதி:
தேர்தல் நேரத்தில் காவல் துறையினர் நடந்து கொண்ட முறைகள், உருவாக்கிய கட்டுப்பாடுகள், நடத்திய சோதனைகளுக்கு தமிழக அரசு பொறுப்பல்ல. தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு.
வேல்முருகன் (பாமக):
பல்வேறு தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்தாலும் எங்களின் அய்யா (ராமதாஸ்), சின்ன அய்யா (அன்புமணி ராமதாஸ்) வாகனங்களை மட்டும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தார்கள். ஆனால், மற்றவர்களின் வண்டிகள் தொடர்ந்து சோதனை செய்யப்படவில்லை. சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர்.
முதல்வர் கருணாநிதி:
தொடர்ந்து ஏன் சோதனை செய்யப்படவில்லை என்று வேல்முருகன் கேட்கிறார்? மார்ச் 24}ம் தேதி நான் பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது எங்கள் கட்சியின் பெரிய அய்யாவாகிய என்னுடைய வண்டியையும், சின்ன அய்யாவாகிய ஸ்டாலின் வண்டியையும் சோதனை செய்தார்கள்.
வேல்முருகன் (பாமக):
அதனை நான் அறிவேன். தீவிரவாதிகளைப் போல சோதனை நடத்தியதைத் தான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமைச்சர் எ.வ. வேலு: பென்னாகரத்தில் எனது வண்டியைத்தான் முதன் முதலாக சோதனை செய்தார்கள். ஒரே நாளில் மூன்று இடங்களில் அமைச்சரான எனது வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்கள்.
ஜி.கே. மணி (பாமக):
தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த அமைப்பாக இருந்தாலும் முதல்வரின் வாகனத்தைச் சோதனையிட வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் அய்யா (ராமதாஸ்), மற்றும் சின்ன அய்யாவை (அன்புமணி ராமதாஸ்) சோதனை என்ற பெயரில் பலமுறை அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.