கடலூர் :
கடலூர், விழுப்புரம் நகரில் 3 ஜி மொபைல் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது என தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார்.
கடலூரில் தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே 29 நகரங்களில் 3 ஜி வசதி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் கடலூர், விழுப்புரம் நகரங்களில் 3 ஜி வசதி இன்று முதல் (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரத்தில் தற்போதுள்ள இயந்திரத்தின் மூலம் 5,000 பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதியுள்ளது. இந்த வசதியின் மூலம் 3 ஜி வசதியுள்ள நகரங்களில் 3 ஜி சந்தாதாரர்களோடு வீடியோ அழைப்புகளை முகத்தை நேராக பார்த்து பேசும் வசதி கிடைக்கும். முக்கிய நிகழ்ச்சிகளை "டிவி'யில் பார்க்க நேரம் அல்லது வசதியில்லாத போது செல்போன் மூலமாகவே கண்டுகளிக்கும் வசதி உள்ளது. நிகழ்ச்சிகளை வீடியோவாக படம் பிடித்து உடனுக்குடன் "லைவாக' அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. மொபைல் "டிவி' யில் 40 சேனல்கள் வரை பார்த்து மகிழலாம். இதற்கு மாதமொன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு சேனல் மட்டும் பார்க்க வேண்டு மென்றால் கூட (ஒரு நாளைக்கு) 10 ரூபாயில் பார்த்து மகிழலாம்.
டேட்டா உபயோகிக்கும்போது 3.5 எம்.பி., வரை வேகம் கிடைக்கும். இந்த வசதிக்கென தனியாக மொபைல் போன் உள்ளது. தொலை தொடர்புத் துறையிலும் 3ஜி வசதியுள்ள மொபைல் 6,500 ரூபாய்க்கு கிடைக்கும். 3 ஜி சிம் கார்டுகள் கடலூர், விழுப்புரம் நகரப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், முகவர்களிடமும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிம் விலை 59 ரூபாய். ஏற்கனவே மொபைல் வைத்திருப்போர் எஸ்.எம்.எஸ்., மூலம் 3 ஜி சேவையை பெறலாம். இவ்வாறு பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார். டி.ஜி.எம்., விஸ்வநாதன், டி.ஜி., ஜெயந்தி அபர்ணா, சுந்தர்ராஜ், கோட்டப் பொறியாளர்கள் சாந்தா, சமுத்திரவேலு, இளங்கோ, பால்கி உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக