உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து குறைவால் 400 அடிக்குக் கீழ் சென்ற ஆழ்குழாய்க் கிணறுகள்


கருவேல மரங்கள் வளர்ந்து தூர்ந்து கிடக்கும், வெலிங்டன் ஏரியின் துணை ஏரியான 300 ஏக்கர் ஆயக்கட்டு உள்ள கார்மாங்குடி ஏரி. (வலது படம்) வெலிங்டன் ஏரியின் தரை
கடலூர்:

             தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று, திட்டக்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் வெலிங்டன் ஏரி. இது 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது.

                    திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில், 62 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. சிறு சிறு ஓடைகள் வழியாகவும், வெள்ளாற்றில் இருந்து தொழுதூர் அணைக்கட்டு மூலமாகவும் வெலிங்டன் ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. பருவமழை காலத்தில், கிடைக்கும் நீரைக் கொண்டு, ஆண்டுக்கு 220 நாள்கள் பாசனத்துக்கு நீர் கிடைக்கும் வகையில் ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால் வெள்ளாற்றில் பல அணைகள் கட்டப்பட்டு விட்டதால், நீர் வரத்து குறைந்து விட்டது.  இதனால் ஏரி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிரம்புவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஏரியின் மொத்த நீர்மட்டம் 29 அடி. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதே இல்லை. ஏரியின் நீர் மட்டம், அளவுகோல் இருக்கும் இடத்தில்தான் 29 அடி. மற்ற இடங்களில் 18 அடி ஆழம்கூட இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

                  விருத்தாசலம் திட்டக்குடி வட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில் கரும்பு, நெல், உளுந்து, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் பெருவாரியாகச் சாகுபடி செய்யப்படுகின்றன.இதில் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரி நேரடிப் பாசனம். 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரியின் 52 துணை ஏரிகள் மூலமாகப் பாசன வசதி பெறும் வகையில், ஆங்கிலேயர்களால் பாசனத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் வெலிங்டன் ஏரியும் அதன் துணை ஏரிகளும், இணைப்பு வாய்க்கால்களும் தூர்வாரப்படாதது மற்றும் ஆக்கிரமிப்புகளால் இன்று, 27 ஏரிகள் மட்டுமே உள்ளதாகவும், இணைப்பு வாய்க்கால்கள் ஒற்றையடிப் பாதைகளாக மாறிவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனத்தில் உள்ளன. 

               வெள்ளாற்றில் போதிய தண்ணீர் வராததாலும், வெலிங்டன் ஏரி நிரம்பாததாலும், 10 ஆண்டுகளுக்கு முன் 45 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது 120 அடி ஆழத்துக்கும் கீழ் சென்றவிட்டது.150 அடி தோண்டப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் தற்போது, 400 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. தண்ணீரின் தன்மையும் மாறி, கரும்பு, நெல் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும், கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை அதிகரித்து வருவதாகவும் விசாயிகள் கூறுகிறார்கள். விவசாயத்தில் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்கள் காரணமாக, விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மாற்றுத் தொழில்களை நாடி, நகரங்களுக்கு இடம் பெயரத் தொடங்கவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். வெலிங்டன் ஏரிக்கரை பழுதடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக 18 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. மேலும் 6 அடிக்கு மேல் ஏரி தூர்ந்து மண் மேடிட்டுக் கிடக்கிறது.ஏரிக்கரையை சீரமைக்க தமிழக அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கி, 85 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. எனினும் தண்ணீருக்கு என்ன வழி? காவிரியில் இருந்து இணைப்பு வாய்க்கால் ஒன்றை வெட்டினால்தான் ஏரிக்கு நிரந்தரமாகத் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

இது குறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டப் பொதுச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

                "வெலிங்டன் ஏரியின் 52 துணை ஏரிகள் தூர்ந்து, 27 ஏரிகள் மட்டுமே உள்ளன.கீரனூர், சிறுகரம்பலூர், புலிவலம் உள்ளிட்ட 40 கிராமங்கள் குடிநீருக்கே தவிக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆழ்குழாய்க் கிணறுகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் 120 அடிக்குக் கீழே சென்றுவிட்டதால், 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை, 20 குதிரைத்திறன் கொண்டதாக மாற்றும் நிலை ஏற்பட்டு விட்டது.ஆனால் மின் வாரியம் அனுமதி கொடுக்க மறுக்கிறது. பிரச்னையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது, மின்வெட்டு.40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறிவிட்டதால், ஏக்கருக்கு 60 டன்கள் வரை கிடைத்த கரும்பு தற்போது 40 டன்களாகக் குறைந்து விட்டது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior