உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் தரம் உயர்த்த பரிந்துரை : சட்டம் ஒழுங்கை காத்திட கூடுதல் போலீஸ்

கடலூர் : 

               சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் தரத்தை உயர்த்தி கூடுதல் போலீசார் நியமித்திட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

              சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக தமிழக போலீஸ் துறை விளங்கி வருகிறது. இருப்பினும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தாததால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தி மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் துறையை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக போலீஸ் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திட கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு "போலீஸ் ஆணையம்' அமைத்தது.

                        இக்குழுவினர் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், அதிக அளவில் பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகள், எதன் காரணமாக பிரச்சனை ஏற்படுகிறது, அந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் நிலை, போலீசாரின் எண்ணிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விவரங்களின் அடிப்படையாக கொண்டு போலீஸ் துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் பிரச்னைகள், குற்றங்களின் அடிப்படையில் ஸ்டேஷன்களை "ஹெவி, மீடியம், லைட்' என மூன்று வகையாக பிரிக்கவும், "ஹெவி' ஸ்டேஷன்களுக்கு 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப் இன்ஸ் பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் 73 பேர் என மொத்தம் 80 பேரும், "மீடியம்' ரக ஸ்டேஷன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று சப் இன்ஸ்பெக்டர், 46 போலீசார் என மொத்தம் 50 பேரும், "லைட்' ரக ஸ்டேஷன்களுக்கு இரண்டு சப் இன்ஸ் பெக்டர்கள், 28 போலீசார் என மொத் தம் 30 பேரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

                      போலீஸ் ஆணைய பரிந்துரையில் முக்கிய அம்சங்களை செயல் படுத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு முதல் கட்டமாக போலீஸ் ஸ்டேஷன்களை தரம் பிரித்து போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்திட ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கருத்துரை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதிக் கலவரம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம் உள்ள கடலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள 45 போலீஸ் ஸ்டேஷன்களில் 9 ஸ்டேஷன்களை "ஹெவி', 13 ஸ்டேஷன்களை "மீடியம்', 23 ஸ்டேஷன்களை "லைட்' என தரம் பிரிக்கவும், இதன்படி தற்போது உள்ள 7 போலீஸ் உட்கோட் டங்களை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்திற்கு 4 இன்ஸ்பெக்டர் கள், 12 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள், முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போலீசார் 422 பேர் என மொத்தம் 438 பேர் கூடுதலாக நியமிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட் டுள்ளது.

                    மேலும் மாவட்டத்தில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் பரப்பளவு பெரியதாக உள்ளதால் நிர்வாக வசதிக்காக இந்த ஸ்டேஷனை இரண்டாக பிரித்து ரெட்டியூரை தலைமையாக கொண்டு புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கவும், அதேபோன்று அதிகம் பிரச்னைகள் ஏற்படும் மங்களூர் மற்றும் பட்டாம்பாக்கத்தில் புதிதாக போலீஸ் ஸ்டேஷன்களை ஏற்படுத்தவும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் பரிந்துரையை ஏற்று வரும் 2011ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை தரம் பிரித்து கூடுதல் போலீசார் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior