கடலூர்:
கடலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக, பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்களுக்கு, புதிய பஸ் வசதி செய்யப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
கடலூர் அருகே பச்சாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், கடலூர்- விருத்தாசலம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் பஸ்கள் சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், பெரியகாட்டுசாகை வழியாக இயக்கப்பட்டதை மாற்றி, கடலூர்- சிதம்பரம் சாலை வழியாகச் சென்று ஆலப்பாக்கம் அருகே வலது பக்கம் திரும்பி, குள்ளஞ்சாவடி வழியாக விருத்தாசலத்துக்கு இயக்கப்படுகின்றன.
இதனால் சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், பெரியகாட்டுசாகை கிராம மக்கள், புறநகர் பஸ் வசதியை இழக்க நேரிட்டது. எனவே அக்கிராம மக்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இரு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த இந்த இரு பஸ்கள் (219வி மற்றும் 219விஏ) 24 தடவை, தற்போது நகரப் பஸ்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் மேற்கண்ட கிராமங்கள் வழியாக கடலூர் வரும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக