கடலூர்:
வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரிடம் விற்றார்.
சீனுவாசன் அந்நிலத்தை நெய்வேலி அடுத்த இந்திரா நகர் சவுந்தர்ராஜனுக்கு விற்று விட்டார். இதற்கிடையே சூடாமணி, "தனது கணவர் முருகபெருமாளை ஏமாற்றி நிலத்தை வாங்கி விட்டனர்' என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சவுந்தர்ராஜன் மற்றும் கீழகுப்பம் சவுரிராஜன் உள்ளிட்ட ஆறு பேர் வடலூர் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிய போது, அதை தடுக்கச் சென்ற சூடாமணியை சவுந்தர்ராஜன், சவுரிராஜன் கட்டியாங்குப்பம் பெருமாள், தாமோதரன், பன்னீர், பண்ருட்டி ரங்கநாதன் (45) மற்றும் வடலூர் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் மிரட்டி, மானபங்கப்படுத்தியதாக வடலூர் போலீசில் புகார் செய்தார். சவுந்தர்ராஜன், சவுரிராஜன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட ஏழு பேர் மீது, பெண் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக