விருத்தாசலம்:
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களுக்கு தனிநபர் கட்டணம் வசூலிக்கிறார் என்று நகர்மன்ற தலைவரும், நகராட்சி ஊழியர் தான் வசூலிக்கிறார் என்று ஆணையரும் தெரிவித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் கூறியது:
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களுக்கான வசூலை தனிநபர் செய்கின்றார் என தகவல் கிடைத்ததின் பேரில், நான் பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது நகராட்சிக்கு தொடர்பில்லாத கண்ணன் என்ற நபர் வசூல் செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த வசூல் புத்தகத்தை வாங்கிப் பார்த்தபோது, பஸ் ஒன்றுக்கு கட்டணம் 12 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட புத்தகம் இருந்தது. அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, நகராட்சி துப்புரவு பணியாளர் பழனி என்பவர் புத்தகம் கொடுத்து தினமும் வசூல் செய்ய சொல்லுவார். நான் வசூல் செய்து தினமும் அவரிடம் ரூ. 3480 கொடுப்பேன். அவர் எனக்கு தினக்கூலியாக ரூ 250 கொடுப்பார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் எழுத்து மூலமாகவும் எழுதிக்கொடுத்துள்ளார். கண்ணனிடம் இருந்த ரசீது புத்தகத்தில் நகராட்சி சீல் போடப்பட்டுள்ளது. அந்த முத்திரை அலுவலக மூலம் போடப்பட்டதா அல்லது தனியார் மூலம் தயார் செய்யப்பட்டதா என்று ஆராயப்படும். இதையடுத்து பஸ் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை பார்வையிட்டேன். அங்கு பயன்படுத்தப்பட்ட ரசீதில் விருத்தாசலம் நகராட்சி 2009-2010 என உள்ளது. ஆனால் தற்போது 2010-2011 நடந்து கொண்டிருக்கிறது. இதில் கட்டணம் 2 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இதை சிவப்பு மையால் அடித்து ரூ. 1 என திருத்தம் செய்துள்ளனர். எனவே மேற்கண்ட முறைகேடுகளுக்கு யார் காரணம் என்பதை ஆணையர் கண்டறிந்து, நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் கூறினார்.
நகர்மன்றத் தலைவரின் இத் தகவல் குறித்து நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை கூறியது:
பஸ் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுகள் நடைபெறவில்லை. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ஜூன் 2009 முதல் நகராட்சி சார்பில் தான் பஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்க 9 முறை ஏலம் விட்டும், இதில் இழப்பு ஏற்படுவதாகக் கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் நகராட்சி ஊழியர் பழனி என்பவர் தான் வசூல் செய்து வருகிறார். இவர் வசூல் செய்யும் புத்தகமும், பற்றுச்சீட்டில் உள்ள முத்திரையும் நகராட்சி அலுவலகத்துக்கு உள்பட்டதாகும். இதில் தவறு எதுவும் இல்லை. வசூல் தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்வையிட்டேன். புதன்கிழமை காலையில் கூட ரசீது புத்தகத்தை நான் ஆய்வு செய்தேன். ஆனால் தனிநபர் வசூல் செய்கிறார்கள் என்று நகர்மன்ற தலைவர் கூறுவது அவருடைய கருத்து. வசூல் செய்யப்படும் பணம் முறையாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. அப்படி வசூல் செய்வதில் குளறுபடிகள் நடப்பதாக புகார் வந்தால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பஸ் நிலைய வசூல் குறித்து பொது ஏலம் விடப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக