உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

லாபம் தரும் இயற்கை ஸ்ட்ரூவைட் உரம்


சிதம்பரம்:
 
              தமிழக வாழை சாகுபடி விவசாயிகள்  சில ஆண்டுகளாக பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றனர்.வேளாண் இடுபொருள்களின் அதிகப்படியான விலை உயர்வு, பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாக வாழை மரங்கள் ஒடிந்து விடுதல் போன்ற காரணங்களால் கடுமையான உற்பத்தி இழப்புகள், பொருளாதாரச் சரிவுகளை சந்தித்து வருகின்றனர். 
 
                    வாழை சாகுபடியில் அதிகப்படியாக செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களையும் சந்திக்கின்றனர்.இத்தகைய நடைமுறைச் சூழலில் குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக லாபம் பெற்றுத் தரும் புதிய வாழை சாகுபடி முறைகள் பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
 
ஸ்ட்ரூவைட் உரம்: 
 
                 வாழை சாகுபடியில் பல நடைமுறை சிக்கல்களுக்கு எளிதான தீர்வுகளை இயற்கை ஸ்ட்ரூவைட் உரம் தருகிறது. மனிதச் சிறுநீர் மற்றும் மெக்னீசியம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்ட்ரூவைட் உரத்தை விவசாயிகள் தங்களின் வாழைத் தோட்டத்தில் பயன்படுத்தும் போது செயற்கை உரமிடுதல் பாதிப்புகளை தடுப்பதுடன் பூச்சி மற்றும் நோய் தாக்குதலையும் குறைக்கிறது. வாடல் நோயால் ஏற்படும் உற்பத்தி இழப்புகள் வாழை சாகுபடியில் தடுக்கப்படுகிறது. 
 
                  ஸ்ட்ரூவைட் உரத்தை பயன்படுத்தும் போது வாழை மரத்துக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து எளிதாக கிடைக்கிறது. எனவே விவசாயிகள் தங்களின் வாழைக்குத் தேவையான அளவு சாம்பல் சத்தை ஸ்ட்ரூவைட் உரத்துடன் கலந்து சாகுபடி பணிகளுக்கு பயன்படுத்தலாம். திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஸ்ட்ரூவைட் உரத்தை உருவாக்கியது. தற்போது பரிசோதனையில் உள்ள நிலையில் இந்த ஸ்ட்ரூவைட் உரங்கள் திருச்சியில் உள்ள தனியார் வேளாண் இடுபொருள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் உலகத்தின் பல நாடுகளில் வாழை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியில் ஸ்ட்ரூவைட் இயற்கை உரம் அதிகளவில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படச் செய்துள்ளது.
 
பிற பயன்கள்: 
 
                    செயற்கை உரங்களைப் போல் மண், நீர் மற்றும் இயற்கை வளங்களில் பாதிப்பு ஏற்படச் செய்யாது. விவசாயிகள் குறைந்த செலவில் சாகுபடிப் பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் பெற முடியும். தமிழகத்தின் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் வாழை சாகுபடியில் அதிக உற்பத்தி, உற்பத்தி திறன் மற்றும் மகசூல் பெற இயற்கை ஸ்ட்ரூவைட் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior