டாஸ்மாக்' ஊழியர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் வரும் ஆக., 11 முதல் காலவரையற்ற, "ஸ்டிரைக்' நடத்த தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்துள்ளது. இக்குழு, முறைப்படி நேற்று உள்துறை, அரசுத்துறை செயலர்களையும் சந்தித்து நோட்டீஸ் அளித்துள்ளது. "ஸ்டிரைக்' துவங்கினால், "டாஸ்மாக்' சரக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகம் முழுவதும் 6,400 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும், 12 மணி நேரமாக உள்ள பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களையும் நடத்தினர். தமிழக அரசு, இந்த கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இதனால், தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள், ஒன்றிணைந்து போராட முடிவு செய்தன.இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,), டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,), பாட்டாளி தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை துவக்கின.
கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24ம் தேதி திருச்சியில் பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை நடத்தின. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். "கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி முதல் காலவரையற்ற, "ஸ்டிரைக்' துவக்குவது என முடிவு செய்யப்பட்டது .இதன் அடுத்த கட்டமாக, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று, உள்துறை செயலர் ஞானதேசிகன், தொழிலாளர் நலத்துறை அரசுச் செயலர் பிரபாகர் ராவையும் சந்தித்து, "ஸ்டிரைக்' நடத்துவது குறித்து முறைப்படி நோட்டீஸ் கொடுத்தனர்.கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த சின்னசாமி எம்.எல்.ஏ., (அண்ணா தொழிற்சங்க பேரவை), சவுந்தரபாண்டியன் (தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யூ.சி.,), பாஸ்கர் (டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் - சி.ஐ.டி.யூ.,) சிவா (பாட்டாளி தொழிற்சங்க ÷ பரவை) உள்ளிட்டோர் கூட்டாகச் சென்று நோட்டீஸ் கொடுத்தனர்.முறைப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால், போராட்டம் உறுதியாகி விட்டது.
இதுவரை ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என வீதிக்கு வந்து போராடிய தொழிற்சங்கத்தினர், தற்போது அதிரடியாக கடைகளை இழுத்து மூடி போராட்டத்தில் குதிக்க முடிவு செய்திருப்பது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும், வரும் 11ம் தேதி முதல் கடைகளை இழுத்து மூடி தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக போராடப் போவதால், குடிமகன்களுக்கு தேவையான, "டாஸ்மாக்' சரக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கூறும்போது, "போராட்ட நாளுக்கு முன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்' என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக