உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

காடுகளை அழிக்கக் கோரும் கடலூர் மாவட்டக் கடலோரக் காவல் படை!


கடலூர் கடற்கரைப் பகுதியில் காணப்படும் வனத்துறைக்குச் சொந்தமான காடு.
 
கடலூர்:

              துறைமுகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனவே கடலூர் கடற்கரையில் உள்ள காடுகளை அழிக்க வேண்டும் என்று, கடலோரக் காவல் படை கோரிக்கை வைத்துள்ளது.

            கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வனத்துறைக்கும் தனியாருக்கும் சொந்தமான காடுகள் நிறைய உள்ளன. இவற்றில் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள், பனை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன 2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தக்கியபோது, மரங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகள், சுனாமி பாதிப்பில் இருந்து பெரிதும் தப்பின. மேலும் அவ்வப்போது கடல் அலைகளின் சீற்றம் ஏற்படும்போதும் இந்த மரங்கள்தான் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து வருகின்றன.

            இந்த நிலையில் கடலோரக் காவல் படையினர் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, கடலூர் துறைமுகப் பகுதி மறைப்பதாகவும், எனவே கடலோரத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத் துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், தமிழக அரசு தலைமைச் செயலருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கடலூர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டம். எங்கெல்லாம் மரங்கள் இருந்ததோ அங்கெல்லாம் சுனாமிப் பேரலைகள் தாக்கவில்லை. எனவே சுனாமிக்குப் பிறகு இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், பல கோடி செலவிட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதைத் தடுக்க இந்த காடுகள் பெரிதும் உதவுகின்றன. தீவிரவாதிகளைக் கண்காணிக்கிறோம் என்ற பெயரில், கடலோரப் பகுதிகளில் மரங்களை வெட்டிவிட்டு, அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது சரியல்ல. எனவே கடலோரக் காவல்படையினரின் கோரிக்கையை அரசு ஏற்கக்கூடாது என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் துரைசாமி கூறியது:

             கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது துறைமுகம் மறைப்பதாகவும், எனவே மரங்களை வெட்ட வேண்டும் என்றும், கடலோரக் காவல் படையினர் வனத்துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர். சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து கடலோர மக்களைக் காப்பாற்ற பெரும் பொருள்செலவில், மரங்கள் நடப்பட்டு வருகின்றன. எனவே மரங்களை வெட்டுவது குறித்து, மாவட்ட வனத்துறை முடிவு எதுவும் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்தும் வாய்ந்த இந்தப் பிரச்னைக்கு அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior