கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 386 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். குடிநீர், சாலை வசதி, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 355 மனுக்களை பெற்று உடனடியாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக் கூட்டதில் "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 386 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், தாட்கோ திட்டத்தின் கீழ் 18 பேருக்கு கடனுதவிகளையும், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 38 பேருக்கு இலவச பட்டாவும் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில்,
"நெய்வேலி குறவன்குப்பத்தில் இயங்கி வரும் டிவின் கிராஸ் மிஷன் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 1,354 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு கடந்த வாரம் 536 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது' என்றார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஆதி திராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், ஆர்.டி.ஓ., முருகேசன் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக