உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

"பயோமெட்ரிக்" ரேஷன் கார்டு திட்டம்

                கைரேகைகள் மற்றும் விழித்திரை பதிவுகளுடன் தயாரிக்கவுள்ள, "பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை வழங்க ஆகும் செலவில் பாதியை, தமிழக அரசுக்கு வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. 

             தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்த ஆண்டு டிசம்பருடன் காலாவதியாகின. இந்நிலையில், புதிய கார்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென்பதால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை, இதே கார்டுகளில் பேப்பர் மட்டும் இணைக்கப்பட்டு, காலம் நீட்டிக்கப்பட்டது.              

             இதற்கிடையே போலி கார்டுகளை கண்டறிய, 100 சதவீத தணிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கார்டுகளை வழங்கும் போது, அதில் குடும்ப தலைவரின் புகைப்படம் மட்டுமன்றி, அனைத்து விவரங்களையும் இடம் பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, குடும்ப உறுப்பினர்களின் 10 விரல் ரேகைகள், கண் விழித்திரை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இவை அனைத்தும்  புதிய ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றிருக்கும். எனவே, ஒருவரது விவரங்கள் இன்னொரு ரேஷன் கார்டில் இடம் பெற முடியாது. அவ்வாறு வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டுகள் பெறுவோரை எளிதில் அடையாளம் கண்டு நீக்கி விடலாம்.

             புதிய ரேஷன் கார்டில் இடம் பெறும் இந்த பதிவுகளை, மத்திய அரசு தயாரிக்கவுள்ள, அனைத்து குடிமகன்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்த முடியும். இது தவிர, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்த விவரங்களை இடம் பெற செய்ய முடியும். இந்த "பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை தயாரிப்பதற்கு 300 கோடி ரூபாய் செலவாகுமென தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது. 

                 இந்த விவரங்களை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்தவுள்ளதால், இதற்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு வழங்க வேண்டுமென, தமிழக அரசு கோரி இருந்தது. "மத்திய சென்சஸ் கமிஷனர்' அலுவலகத்துக்கு விவரங்களை வழங்கவுள்ளதை கருத்தில் கொண்டு, "பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு' திட்டத்துக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்குமென, மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ளார்.  இது பற்றிய இறுதி முடிவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும், மத்திய அரசுடன் இதற்கான உடன்பாடு செய்யப்படவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior