போலி மதிப்பெண் சான்றிதழ் ஊடுருவலை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில், பலர், போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த விவகாரம், பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் பிரச்னை, கல்வித்துறைக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பதால், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னை எழாமல் இருப்பதற்கு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், துறையின் செயலர் குற்றாலிங்கம், தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் டேட்டா சென்டர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலி சான்றிதழை தடுப்பது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக