உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

"இயற்கை அழிவுக்கு மனிதனின் சுயநலமே காரணம்": ராமதாஸ்


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும் என்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார் 
 
           இயற்கை அழிக்கப்படுவதற்கு மனிதனின் சுயநலமே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும்' என்ற கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
 
            இன்றைய சென்னை மாநகரம் எப்படி உள்ளது நாளைய சென்னை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இயற்கை நமக்கு அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று ஆகியவற்றை மனிதர்கள் அழித்து வருகிறார்கள். சென்னை மாநகரம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.இன்று மனிதன் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளான். 
 
             உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டன. பாரம்பரியமான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை போன்ற உணவு வகைகளை யாரும் உண்பதில்லை. பொறித்த, வறுத்த, பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளையே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதன்மூலம் மனிதன் தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்.உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்தக் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளன.
 
             சென்னை மாநகரில் இருந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. அதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கான தீர்வுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌம்யா அன்புமணி, பொதுச்செயலாளர் அருள், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சமூகக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) வரை மூன்று நாள்களுக்கு காலை 10 முதல் இரவு 8 மணி வரை அக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior